கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்.பி.,எம்.எல்ஏக்களுக்கு நல்லபுத்தி வேண்டி காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிறப்பு பூஜை நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவீன் கொலை சம்பவத்தை கண்டித்து, அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அக்கட்சி பிரமுகர்களுடன் பாஜக இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் கற்கள் வீசியிருக்கலாம்” என்றார்.இதைக் கண்டித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கர் குஹா துவாரகநாத் பெல்லுார், பெங்களூரு பனசங்கரியில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று பஞ்சதுர்கா பூஜை நடத்தினார்.அதன்பின்னர் அவர் கூறியதாவது; “பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, அவருடைய சித்தப்பாவான பசவனகுடி எம்எல்ஏ ரவி சுப்பிரமணியா ஆகியோருக்கு நல்ல புத்தி வரட்டும் என வேண்டி பூஜை செய்யப்பட்டது.
அவர்களுக்கு பிரசாதம் அனுப்பிய போது, போலீசாரை ஏவி விட்டு இரண்டு காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்ய வைத்துள்ளனர்.தேஜஸ்வி சூர்யாவும், ரவி சுப்பிரமணியாவும் அதிகாரத்துக்காக, போலீசாரை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம்.
‘விரோதம் விடுங்கள் எம்பி தேஜஸ்வி சூர்யா’ என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்பதற்காகவே, பிரம்ம முகூர்த்தத்தில் பஞ்ச துர்கா பூஜை செய்யப்பட்டது” என்று அவர் கூறினார்.