• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தென்சென்னையில் சூடு பிடிக்கும் பிரச்சாரத் தேர்தல் களம்

Byவிஷா

Apr 1, 2024

கோடை வெயிலின் கோரதாண்டவம் ஒரு புறம் இருக்க, அதையும் பொருட்படுத்தாமல், நட்சத்திர தொகுதியாகக் கருதப்படும் தென்சென்னையில் அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்களின் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரத்தால், களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வேளச்சேரி, விருகம்பாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 23,133 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த முறை தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக), தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக), ஜெயவர்தன் (அதிமுக) என மக்களிடம் நன்கு அறிமுகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் களம் இறங்கியுள்ளதால் இத்தொகுதியானது நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளார். திமுகஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள், சாதனைகளை பிரதானமாக முன்வைத்து தனது பிரச்சாரத்தை தமிழச்சி மேற்கொண்டு வருகிறார். அதில் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.110 கோடியில் தொகுதி முழுவதும் மழைநீர் வடிகால்கள் அமைத்தது, 10 ஆண்டுகாலமாக இந்தப் பகுதியில் நிலவிய குடிநீர்பிரச்சினையை சரிசெய்தது திமுகதான் எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

மத்தியில் ஆளும் பாஜக தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் வஞ்சிப்பதாகவும், அந்த கட்சியுடன் சேர்ந்து அதிமுக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி பிரச்சாரம் செய்துவருகிறார்.

தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோரும் தொகுதிபிரச்சாரங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று தமிழச்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். எனினும், தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என தமிழச்சிக்கு மக்களிடம் எதிர்ப்பும் காணப்பட்டது.
அதிமுக சார்பில் போட்டியிடும் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் சென்னை எம்.ஆர்.சி. நகர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.
திமுக மீது மக்கள் காட்டும் எதிர்ப்பை தொகுதி முழுவதும் பரவலாக்கும் விதமாக தனது பிரச்சார பாணியை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கொண்டுசெல்கிறார். தொகுதி முழுவதும் காலை, மாலை வேளைகளில் வீதிவீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார். நம்பிக்கை அடிப்படையில் தினந்தோறும் கோயில்களில் பிரச்சாரத்தை தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஏற்கெனவே 2014-19-ல் தான் தென் சென்னை தொகுதி எம்பியாக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை சுட்டிகாட்டி வாக்கு சேகரிக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் தென் சென்னை மக்களுக்காக திமுக எம்பி மறந்தும் எந்த நலத்திட்டத்தையும் கேட்டு பெறவில்லை என்பதையும் தொடர் விமர்சனமாக வைக்கிறார். அதேநேரம் பாஜக குறித்து பெரியளவில் குற்றச்சாட்டுகளை இவர் முன்வைப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி வாக்கு சேகரித்தார்.
தமிழிசை (பாஜக) – பிரதான இவ்விரு கட்சிகளை எதிர்கொள்ளவே தமிழிசை சவுந்தரராஜனை பாஜகவால் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக, திமுகவைவிட பிரச்சாரத்தில் பாஜகவே முன்னிலையில் இருக்கிறது. அதிகாலை நடைபயணம் தொடங்கி, பிரச்சாரத்துக்கு இடையே தொண்டர்கள், வாக்காளர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது, இளைஞர்களுடன் கலந்துரையாடல், மக்கள் கூறும் கோரிக்கைகளை குறிப்பெடுத்தல் என தொகுதியில் எளிய வேட்பாளராக வலம் வருகிறார் தமிழிசை.

மக்களுக்காக நேரடியாக களத்தில் நின்று நல்லது செய்யவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடைபெற்றால் மக்களுக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கும் என்பதையும் தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஆகியோர் இதுவரை பிரச்சாரம் செய்துள்ளனர். அதேபோல், தமிழிசையை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி சோழிங்கநல்லூரில் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை வேட்பாளர் சு.தமிழ்ச்செல்வி தி.நகர் பகுதியில் மபொசி சிலைக்கு முன்பாக உறுதிமொழி எடுத்து வாக்கு சேகரித்தார்.
தென்சென்னை தொகுதியில் நிலவும் மும்முனை போட்டிக்கு இடையே நாம் தமிழர் வேட்பாளர் சு.தமிழ்ச்செல்வி இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிகாட்டியும், விவசாயி சின்னம் பறிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டதாகவும் பிரதானமாக கூறிவருகிறார்.
தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு மரண தண்டனை உட்பட கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை மக்களிடம்கூறி வாக்கு சேகரிக்கிறார். இவருக்கு ஆதரவாக சீமான் ஏப்ரல் 3-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், வரும் நாட்களில் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்களும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.