• Fri. Sep 29th, 2023

தந்தை மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகன் கைது…

ByKalamegam Viswanathan

Aug 8, 2023

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை தாலுகா, கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (65). இவரது மனைவி மாரியம்மாள் (60). இவர்களுக்கு கருப்பசாமி (35), சஞ்சீவிகுமார் என்ற இரண்டு மகன்களும், முத்துசெல்வி என்ற மகளும் உள்ளனர். கருப்பசாமிக்கு உடல்நலம் பாதிப்பு இருப்பதால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. மற்ற இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். சஞ்சீவிகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். கருப்பசாமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கிருஷ்ணசாமியும், மாரியம்மாளும் பால் வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில், கிருஷ்ணசாமி தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் வழக்கம் போல போதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணசாமியை, அவரது மகன் கருப்பசாமி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தந்தை மீது கடும் கோபத்தில் இருந்த கருப்பசாமி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட கிருஷ்ணசாமி, சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகன் கருப்பசாமியை, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் போதையில் தகராறு செய்த தந்தை மீது, மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *