திருச்சி விமானநிலையத்தில் பயணி ஒருவரது பெட்டியில் உள்ள பீடிங் பகுதியில் உருளை வடிவிலான தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி தங்கத்தைக் கைப்பற்றியதால் அங்கு சிறிது நேரம்பரபரப்பு நிலவியது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு துறையினர் வழக்கம் போல் சாதாரணமாக சோதனையிட்டனர். சோதனை முடிந்தபின் பயணிகளை ஒவ்வொருவராக வேலையே அனுமதித்து வந்தனர். அப்படி ஒவ்வொரு பயணியின் உடைமைகளையும் ஸ்கேனர் எந்திரத்தின் மூலம் சோதனையிட்டபோது ஒரே ஒரு பயணி கொண்டு வந்த பெட்டியில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பெட்டியில் உள்ள பீடிங் பகுதியை சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது அதில் உருளை வடிவிலான தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அந்தப் பெட்டியின் கைப்பிடியில் பொருத்தி எடுத்து கொண்டுவரப்பட்ட தங்கத்தின் எடை 250 கிராம் என்றும் அதன் மதிப்பு 12 லட்சத்து 84 ஆயிரம் என்றும் சுங்கத்துறையினர் மதிப்பீடு செய்து தெரிவித்தனர். மேலும் அந்தப் பயணியிடம் இருந்து அந்த கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு பயணி கொண்டுவந்த கடத்தல் தங்கத்தால் மீதமிருந்த பயணிகளின் வெளியேறும் அனுமதி தாமதமானது. மேலும் அதன் பின்னர் சுங்கத் துறையினர் அனைத்து பயணிகளிடமும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.