திண்டுக்கல் அஞ்சுக்குழிபட்டியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் 55. அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவரும் நத்தம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கருஞ்சாமி 42 என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 2019ல் கருஞ்சாமி தன்னிடம் சிவப்பு நிற அசல் நாக மாணிக்கக்கல் உள்ளது. அதை வெளிச்சந்தையில் விற்க விரும்புகிறேன். நல்ல விலைக்கு வாங்குபவர்கள் யாராவது இருந்தால் தெரியப்படுத்து என நண்பர் சந்தான கிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிகப்பு மாணிக்க கல்லை பார்த்த சந்தானகிருஷ்ணன், தானே வாங்கிக் கொள்வதாக கருஞ்சாமியிடம் உறுதி அளித்தார். முதல்கட்டமாக ரூ1.50 லட்சம் ரூபாய்க்கு விலை கொடுத்து கருஞ்சாமிடம் இருந்து அவர், மாணிக்ககல்லை பெற்றுக்கொண்டார். வீட்டிற்கு சென்று பரிசோதித்து பார்த்தபோது அந்த கல் போலியானது என்றும். சிவப்பு நிற பாசி கல்லை கொடுத்து கருஞ்சாமி ஏமாற்றியது தெரிந்தது.

இது குறித்து அவர் கருஞ்சாமியிடம் கேட்கையில் கூடுதலாக 1.50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அசல் கல்லை தருவதாக மீண்டும் பேரம் பேசினார். இதற்கு சம்மதம் தெரிவித்த சந்தானகிருஷ்ணன், பணத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார்.

இதனை தொடர்ந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்துடன் வடமதுரை மாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அருகே கருஞ்சாமியின் உறவினரான மாமா கரந்தன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு நேரில் பணத்துடன் வந்து அசல் கல்லை பெற்றுக் கொள்ளுமாறு கருஞ்சாமி கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய சந்தான கிருஷ்ணன், அவரது மகன் ஹரிஹரன், ஹரிஹரனின் நண்பர் திண்டுக்கல் என்.எஸ்., நகரை சேர்ந்த சிவகுமார் 27 ஆகிய மூவரும் மாமரத்துபட்டி தோட்டத்திற்கு சென்றனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், சந்தானகிருஷ்ணன் தரப்புக்கும் கருஞ்சாமி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருஞ்சாமி அவரது உறவினர், நண்பர்களான நத்தம் மற்றும் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னையா 33, கரந்தன் 52, சின்ன குஞ்சு 34, வெள்ளைச்சாமி 61 பால்ராஜ் 33 ஆகிய ஆறு பேரும் சேர்ந்து சிவக்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து கருஞ்சாமி உள்பட ஆறு பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவச்சந்திரன் ஆஜராகி வாதாடினார்.

சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று 16.09.26 திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
அதில் கருஞ்சாமிக்கு ஆயுள்தண்டனை, ரூ.1500 அபராதம், மற்றவர்கள் சின்னையா, கரந்தன், சின்ன குஞ்சு, வெள்ளைச்சாமி, பால்ராஜ் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.








