• Wed. Jun 7th, 2023

பெரியாரிஸ்ட்களால் கொண்டாடப்படும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’!

தெலுங்கு முன்னணி நடிகர் நானி நடித்திருக்கும் ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம், தற்போது தமிழகத்தில் பெரியாரிஸ்டுகள் கொண்டாடப்பட்டு வருகிறது!

தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் தடாலடியான, வன்முறை காட்சிகளுடன்தான் இருக்கும் என்பது, மக்கள் மனதில் உள்ள ஒரு பிம்பம்! அப்பிம்பத்தைத் தகர்த்திருக்கிறது ஷ்யாம் சிங்கா ராய்! நிறைய தெலுங்கு சினிமாக்கள் நக்சல்பாரி இயக்கங்களைப் பற்றி பேசியிருக்கின்றன. செங்கொடியும் துப்பாக்கியும் ஏராளமான தெலுங்கு சினிமாக்களில் இடம்பெற்றிருக்கின்றன.

தெலுங்கு சினிமாவின் செங்கொடி கதாபாத்திரங்கள் ஜாதிய ஒடுக்குமுறை, பண்ணையார் ஒடுக்குமுறைக்கு எதிராக பேசியிருக்கின்றன. இந்த பாதையின் அதி உச்சமாகத்தான் நானியின் ஷ்யாம் சிங்கா ராய் சினிமா கொண்டாடப்படுகிறது.

மறுஜென்மம் தொடர்பான கதை என்கிற ஒற்றை சொல்லாடலுடன் ஷ்யாம் சிங்கா ராய் சினிமாவை புறக்கணித்துவிட முடியாது. நக்சல்பாரி இயக்கம் பிறப்பெடுத்த, இந்திய இடதுசாரிகளின் தாய்நிலமாக திகழ்ந்த மேற்கு வங்கத்தில் ஜாதிய ஒடுக்குமுறை, தேவதாசிகள் நடைமுறைகளுக்கு எதிரான கலகக்காரராய் நானி மிடுக்குடன் மிளிர்கிறார். நக்சல்பாரிகளுடன் இணைந்திருக்கிறாய் என்கிற போது தேவைப்பட்டால் காடுகள் எங்கே இருக்கிறது எனக்கும் தெரியும் என்கிறார். ஆனால் ஆயுதத்தைவிட பேனா முனையை அதிகம் நம்பும் கதாபாத்திரம்தான் ஷ்யாம் சிங்கா ராய்.

இந்தியாவில் 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி வரையில் பெண்களை கோவில்களுக்கு நேர்ந்துவிடும் தேவதாசி நடைமுறை இருந்தது; வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த பெண்கள் தேவதாசிகளாக்கப்பட்டனர்; ஷ்யாம் சிங்கா ராய் படுகொலைக்குப் பின்னர் சோனாகட்ச் எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழில் நடைபெறும் இடங்களுக்கு தேவதாசிகளில் ஒரு பகுதியினர் இடம்பெயர்ந்தனர் என்கிறது இக்கதை. ஷ்யாம் சிங்கா ராய் அத்தகைய தேவதாசி பெண் ஒருவரை மணந்தார் என்கிற காரணத்துக்காக, தன் குடும்பத்தினராலேயே ஆணவப் படுகொலை செய்யப்படுகிறார்.

இத்திரைப்படத்தை பெரியாரிஸ்டுகள், ஜாதி ஒழிப்பாளர்கள், இடதுசாரி சித்தாந்தவாதிகள் தமிழகத்தில் கொண்டாடி வருகின்றனர். தோழர் திவாகரன் என்ற மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த பதிவர், சாதி ஒழிப்பு மற்றும் பெண் விடுதலை குறித்து பேசியிருக்கும். ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் சிறந்த கலைப்படைப்பு. நம் தோழர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என கூறியுள்ளார்.

மேலும், ‘ஒரு தோட்டா ஒருத்தருக்கு தான் வேலை செய்யும். ஆனால் ஒரு வார்த்தை லட்சம் பேரிடம் புரட்சியை ஏற்படுத்தும். சமுதாயத்தை மாற்றியமைக்கும் சக்தி எழுத்தாளரிடம் உள்ளது’ உள்ளிட்ட வசனங்களையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

பெரியாரியலாளரான ‘காட்டாறு’ அதிஅசுரன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நாம் தவறாமல் பார்த்து – பரப்ப வேண்டிய Dravidian Commercial Movie ஷ்யாம் சிங்காராய். Netflix ல் வந்துள்ளது. தமிழில் 1984 ல் கமல், ஷோபனா நடிப்பில் வந்த “எனக்குள் ஒருவன்” படத்தைப் போன்ற பின்னணிதான். ஆனால், வசனங்கள் பெரியாரை நினைவுபடுத்துகின்றன. “ஒருவரது சுயமரியாதையைவிட உயர்வானது உலகில் வேறு எதுவும் இல்லை” “உன் வீடு நல்லா இருக்கணும்ங்கறது உன் சுயநலம், என் நாடு நல்ல இருக்கணும்ங்கறது என் சுயநலம்” “நாத்திகனுக்கு பண்டிகை எதுக்கு?” “100 வருசம் தேவதாசியா வாழ்றதவிட, ஒரு நாள் சுதந்திர மனுசியா வாழ்றது மேல்” உள்ளிட்ட வசனங்கள், பெரியாரின் கொள்கைகளை துளிர்க்க செய்கின்றன!

ஒரு படகுப் பயணத்தின் உரையாடல்: “தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் எல்லாம் கத்துக்கிட்டேன்… படகு ஓட்டத் தெரியுமா???….தெரியாது…இதுபோன்ற பெரியாரிய வசனங்கள் மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு இவைகளுக்கு அடிப்படைக் காரணமான பிராமணர் ஒழிப்பு என துணிச்சலாக வெளிவந்திருக்கும் படம் ஷ்யாம்சிங்காராய்!

ராய் எனும் ஜாதிப்பெயரும், க்ளைமாக்சில் வரும் மறுஜென்மக் கருத்தும் இல்லாவிட்டால் இது ஒரு முழுமையான திராவிடம் சார்ந்த திரைப்படம் ஆகும்.. இருந்தாலும் தேவதாசி முறையைக் காப்பாற்றும் வில்லனாக பிராமணரைக் காட்டியதும், அவரை வெட்டியதும் இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை! வாழ்த்துக்கள் நானி” என்று அதிஅசுரன் பதிவிட்டுள்ளார்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *