• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன்,மட்டன் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா?

ByA.Tamilselvan

Jun 12, 2022

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலே கறிக்கடைகளில் கூட்டம் அலைமோத துவங்கிவிடுகிறது. சில ஊர்களில் சனிக்கிழமை இரவே கறிவியாபாரம் துவங்கிவிடுகிறது.சிலர் போன் மூலம் முதல்நாளே ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள்.இதற்கெல்லாம் ஒருபடி மேலாக இணைய தளங்கள் மூலம் ஆர்டர் செய்து ஆடு,கோழி ,மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியும் வந்துவிட்டது. எப்படித்தான் இந்தபழக்கம் தொற்றிக்கொண்டதோ தெரியாது. இந்தபழக்கத்தை மாற்ற சில நூறு ஆண்டுகள் கூட ஆகலாம் என நினைக்கிறேன்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை கூட மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் ஆசைப்பட்டு பார்த்ததில்லை. இத்தனைக்கும் அப்போது எல்லா வீடுகளிலும் ஆடு , கோழிகள் வளர்ப்பார்கள்…இப்போது போல அப்போது இவற்றுக்கெல்லாம் பெரிய விலை மதிப்பும் கிடையாது…
கிராமங்களுக்குச்சென்றால் எல்லா வீடுகளிலும் ஆட்டுப்பட்டி இருக்கும்…கோழிகளை அடைத்து வைக்கும் பெரிய கூடை இருக்கும்…கூலி வேலை செய்பவர்கள் வீடு உட்பட…வேலைக்குச்சென்று வேலை செய்யும் இடங்களிலும் திரும்பும் வழியில் , வேலிகளில் படர்ந்துள்ள கொடிகளை சேகரித்துக்கொண்டே செல்வார்கள் ஆடுகளுக்கு தீவனம் போட…
அவர்கள் நினைத்திருந்தால் வாரம் ஒருமுறை என்ன , தினமும் கூட கறி சாப்பிட்டிருக்கலாம்…ஆனால் அப்படிச்செய்ததில்லை.. ஞாயிற்றுக்கிழமையானால் கறிச்சோறு தின்றே ஆகவேண்டும் என்று மக்கள் அலைந்ததில்லை…அசைவம் சாப்பிடுவதற்கான காரணங்கள் கூட மிக அரிதானவை…
வராத விருந்தாளிகள் [ குறிப்பாக மருமகன் ] வந்தால் கோழி அடித்து குழம்பு வைப்பார்கள்.. அல்லது வீட்டில் குழந்தைகளுக்கு சளி பிடித்து ரொம்பவும் தொந்தரவு செய்தால் இளம் கோழிக்குஞ்சு சூப் வைத்துக்கொடுப்பார்கள்…அவ்வளவே…
அய்யன் போன்ற சாமிகளுக்கு நேர்ந்துகொண்டு அவரவர் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையல் போடுவது உண்டு


சேவல் கட்டில் பலியாகும் சேவல் கறி… மற்றபடி , ஆட்டுக்கறி சமையல் என்பது குலதெய்வம் , அல்லது அவரவர்கள் ஊரிலுள்ள சிறு தெய்வ வழிபாட்டின் போது கோவில்களுக்கான நேர்ந்து கொண்டு வளர்க்கப்படும் கிடாய் வெட்டும்போதுதான்…
உற்றார் உறவினர் எல்லோரும் வந்து சாப்பிட்டுவிட்டுப்போனது போக மீதமிருக்கும் கறியை [ பெரும்பாலும் தொடைக்கறியை ] தனியாக எடுத்து உப்புக்கண்டம் போட்டு . கம்பிகளில் கோர்த்து வெயிலில் காயவைத்து எடுத்துவைத்துக்கொள்வார்கள்.. மழைக்காலங்களில் ஆற்று மீன் கடல் மீன் குளத்து மீன் கிடைக்காதபோது அதுதான் பிரதான உணவு…
கொங்குப்பகுதியைப் பொறுத்தவரை அசைவ உணவு சமைப்பதும் உண்பதும் சற்று ஆச்சாரக்குறைவான விஷயமும் கூட…கல்யாணம் , சீர் , வளைகாப்பு இப்படி எந்த விசேஷத்திலும் அசைவ உணவு கிடையாது…துக்க வீடுகளிலும் அப்படித்தான்…பதினாறாம் நாள் காரியம் உட்பட எதிலும் அசைவ உணவு கிடையாது…
அவ்வளவு ஏன் , அசைவ உணவு சமைக்க தனியான பாத்திரங்கள் வைத்திருப்பார்கள்… பெறால் சட்டி என்று அழைக்கப்படும் மேற்படி பாத்திரங்களை பிறநாட்களில் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார்கள்… பொடக்காளி என்று அழைக்கப்படும் குளியல‌றையில் [ வீட்டை ஒட்டி ஒரு ஓரமாக தென்னை அல்லது பனை ஓலைகளால் சுற்றிலும் மறைக்கப்பட்ட [ ஒதுக்கு என்பார்கள்] …அமைப்புதான் பொடக்காளி – புழக்கடை என்பதன் மரூஉ ] ஒரு ஓரமாக கவிழ்த்து வைத்திருப்பார்கள்.. அசைவ சமையலுக்கு பயன்படும் அகப்பை அந்த ஓலைப்படலில் சொருகப்பட்டிருக்கும்… அசைவம் சமைத்த அன்று இரவே சுத்தமாக கழுவி எடுத்துப்போய் பொடக்காளியில் வைத்துவிடுவார்கள்.. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் வீட்டை மாட்டுச்சாணம் போட்டு மெழுகிய [ வளிச்சு உடறது ] பிறகே அன்றைய வேலைகளை ஆரம்பிப்பார்கள்…
மிக சமீபகாலமாக மக்கள் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்ற‌ம் என்னை வியக்கவைக்கிறது… ஞாயிற்றுக்கிழமையானால் கறி சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தவிர்க்கவே முடியாத விஷயமாகிவிட்டது… கறிக்கடைகளில் கூட்டம் நெறிபடுகிறது… திரும்பிய பக்கமெல்லாம் அசைவ ஹோட்ட‌ல்கள்…
பெரும்பாலான பெரிய ஊர்களில் எங்காவது ஒரே ஒரு பிரியாணிக்கடை தான் இருக்கும்….இன்று அதன் எண்ணிக்கை பலமடங்கு…
கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகரும் இந்தக்காலத்தில் ஆடுவளர்ப்பு கணிசமாக குறைந்துவிட்டது…
[ திருப்பூர் மாவட்டம் – கன்னிவாடி ] ஆட்டுச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று… இருபது வருடங்களுக்கு முன்பு வரை சந்தைக்கு வந்துகொண்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருபங்கு கூட இப்போது வருவதில்லை… சென்னையைப் பொருத்த வரைக்கும் ஆந்திராவிலிருந்து தான் ஆடுகள் வந்து கொண்டிருக்கிறது அங்கு மட்டும் என்ன இதேநிலைதான் உற்பத்தி குறைவு.. கோழிகளைப்போல ஆடுகளை பண்ணைகளில் வளர்க்கும் முறையும் இன்னும் அதிகரிக்கவில்லை…
பின் நாள்தோறும் புற்றீசல் போல முளைக்கும் இத்தனை அசைவ ஹோட்டல்களுக்குத் தேவையான கறி எங்கிருந்து கிடைக்கும்? அத்தனையும் சுத்தமான , சுகாதாரமான ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்ய யாரால் முடியும்?


அப்புறம் அவன் கிடைக்கும் எல்லாக் கறியையும் கலந்து விற்கத்தான் செய்வான்.. நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகள் , கோமாரி நோயால் செத்த மாடுகள் மற்ற நாலுகால் பிராணிகள் கறி என இப்படி எல்லா இறைச்சிகளும் கலந்து விற்கத்தான் செய்வார்கள்…..
கறியில் கலக்கப்படும்…எக்கச்சக்கமான மசாலாக்கள் , நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது…
இந்த கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் அலைவதற்கு காரணம் இரண்டு காரணங்களை சொல்லாம்.முதலில் வேலை நாட்களில் வேலைக்கு போகும் அவரசத்தில் சரிவர உணவு எடுத்துக்கொள்ள முடியாதது. இரண்டாவதுஅசைவ உணவுக்கான செலவு சைவ உணவுக்கான செலவை விட குறைவாக இருப்பது.மேலும் விருந்தினர்களின் வருகையின் போது அசைவ உணவு சமைத்து போடுவது கவுரவ பிரச்சனையாகிவிடுகிறது.
ஏற்கனவே சொன்னதுபோல அசைவ உணவுகளின் சுத்தமின்மை ,மேலும் உடல் உழைப்புகுறைவு ,பயிற்சியின்மை காரணமாக தற்போது 50 வயது எட்டாத பலருக்கு மாரடைப்பு போன்ற இதயநோய்கள் எளிதாக தாக்குகின்றன.மேலும் வயிற்றுப்பிரச்சனைகள் அதிகரித்து நோய்கள் உடல் உபாதைகள் அதிகம்தாக்குகின்றன.
தப்பிக்க ஒரே வழி… குறைந்தபட்சம் அசைவ உணவுகளைப் பொறுத்தவரைக்குமாவது நம் நம்பிக்கைக்கு பாத்திரமான கடைகள் அல்லது நம் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு திரும்புவது மட்டும்தான்…