• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சித் திருட்டு..,

BySeenu

Aug 22, 2026

​ கோவை, சல்வன் வீதி பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த மாணவரின் விலை உயர்ந்த R15 இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்ற திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, சல்வன் வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும், தனது சொந்தச் செலவுகளுக்காகப் பகுதி நேரமாக (Part-time) வேலையும் செய்து வருகிறார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் சிறுகச், சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு, மாதத் தவணை (EMI) முறையில் புதிதாக R15 ரக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கிப் பயன்படுத்தி வந்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2:45 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சல்வன் வீதி பகுதியில் வீடுகளின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை நோட்டமிட்டு உள்ளனர்.

அப்போது, ஹரிஷ் தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்த R15 பைக்கைக் குறிவைத்த அந்த நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் பூட்டை உடைத்து உள்ளனர். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சாவகாசமாகப் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து தப்பிச் சென்று உள்ளனர்.

காலையில் எழுந்து பார்த்த ஹரிஷ், தனது பைக் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் இருவரும் பைக்கின் பூட்டை உடைத்துத் திருடிச் செல்லும் காட்சிகள் துல்லியமாகப் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

​இச்சம்பவம் குறித்து ஹரிஷ் அளித்த புகாரின் பேரில், வெரைட்டி ஹால் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், மாநகரில் விலை உயர்ந்த பைக்குகளைத் தொடர்ந்து நோட்டமிட்டுத் திருடும் அந்த மர்ம நபர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.