கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே வாலிபர்கள் கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கைக் கொலை வழக்காக மாற்றிப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கிரிஜா (54). இவர்கள் தற்போது சாமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்களது இளைய மகன் பிரதீப் குமார் (34). கூலித் தொழிலாளியான இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு பிரதீப் குமாரை, வெள்ளமடை பூங்கா நகரைச் சேர்ந்த சிலர் சோமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார்டன் அருகே உள்ள காலியிடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
அங்கு வைத்து அந்த கும்பல் பிரதீப் குமாரைக் கொடூரமாகத் தாக்கி உள்ளது. இதில் அவர் இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இச்சம்பவம் குறித்து தாய் கிரிஜா அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பூங்கா நகரைச் சேர்ந்த கார்த்திக் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23) மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவா (24) ஆகிய 4 பேர் மீது முதற்கட்டமாகக் கொலை முயற்சி (Attempt to Murder) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் 3 நாட்களாகத் தீவிர சிகிச்சையில் இருந்த பிரதீப் குமார், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை அடுத்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் இவ்வழக்கை கொலை வழக்காக (Murder Case) மாற்றிப் பதிவு செய்து உள்ளனர்.




