• Mon. Apr 29th, 2024

சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?

சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாக
வந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய ஒன்றிய அரசு அளித்த
பதிலாகவும், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட
தீர்மானமாகவும் பேச்சு பொருளாகி உள்ளது.
எல்லோரும் கனவு காண்கிறோம். சமூகமும் சில சமயங்களில் தனக்கான
கனவை உருவாக்கிக் கொள்ளும். அப்படி இருவகையாகவும் சேது
சமுத்திரம் இருக்கிறது.
அது பாரதியின் தனி மனிதக் கனவாகவும், சேது சமுத்திரக் கால்வாய்
திட்டமாகவும் இந்தக் கனவு உள்ளது. பாரதி ‘சேதுவை மேடுயர்த்தி வீதி
சமைக்க வேண்டும்’ என்கிறார்.  அந்தக் காலத்தில் கப்பல் பயணங்கள்
செய்தவர்கள் விதைத்த கனவு சமூகக் கனவாக மாறிவிட்ட சேது மணல்
திட்டைஉடைத்து கால்வாய் வெட்டினால், இலங்கையைச் சுற்றி கப்பலைச்
செலுத்தத் தேவையில்லையே, பயண நேரம் குறையும், செலவும்
குறையும் என்ற கனவு. கடலிற்குள் காழ்வாய் என்ற கனவு ஆங்கிலேயர்
கனவு. ஸ்டீமர் கப்பல்கள் இலங்கை சுற்றி செல்ல வேண்டியதைத்
தவிர்க்க வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் உருவான கனவு.
பல முறை இதை நனவாக்கிட செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியில்
தான் முடிந்துள்ளது.


வணிக நோக்கில் உருவான இந்தத் திட்டத்தின் வேறு கோணங்களில்
விரிவாகக் கவனிக்கப்படவில்லை. அதில் ஒன்று கடல் பற்றிய புரிதல்.
புவியில் மூன்றில் இரு பங்காக உள்ளது கடல். ஆனால் நிலப்பரப்பை
அறிந்த அளவு அறிவுலகமும், பொது சமூகமம் கடலை அறிந்திடவில்லை.
கடலின் மேற் பரப்பு மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த அளவில் அதன் ஆழ்
பரப்பு பற்றி அறிந்திடவில்லை. கடலின் உயிரியல் அமைப்பு மிகவும்
வேறுபட்டது. உலகின் மிகப் பெரிய விலங்கினமான நீலத் திமிலங்கத்தின்

அடித்தளம் கண்ணுக்குத் தெரியாத – மிதவை உயிரிகள். இவைகள் தான்
கடலின் உணவு சங்கிலியின் முதல் உயிரின வகைகள். இவைகள் சிறு
உயிரினங்களின் உணவாக அவை சற்றே பெரிய உயிரினங்களின்
உணவாக இப்படியாகப் படிப்படியாக பெரிய உயிரினங்களின் உணவாக
உள்ளது. இந்த உயிரின உணவுச் சங்கிலி. இந்த மிதவை உயிரிகள்
மட்டுமின்றி தாழ்வான கடல் பகுதியின் (சேது போன்ற) தரை மட்டத்தில்
வாழும் தாவரங்களும் இந்த உணவுச் சங்கியிலில் முக்கிய
பங்காற்றுகிறது.


இந்த மிதவை உயிரிகளின், தாவரங்களின் மூல ஆதாரமாக இருப்பது
கடலுக்கு மேல் பல இலட்சம் கி.மீ உயரத்தில் இருந்து வரும் சூரிய ஒளி.
இவை நடத்தும் ஒளிச் சேர்க்கை கரியமிலக் காற்று (CO2) – உயிர்காற்று
(ஆக்ஸிஜன்) சமநிலையை பராமரிக்கிறது. விலங்கினங்கள் வெளிவிடும்
கரியமிலக் காற்றை தாவரங்களும, மிதவை உயிரிகளும் உட்கொண்டு
உணவு தயாரித்து உயிர்காற்றை வெளியிடும். இந்த உயிர்க்காற்று 
விலங்கினங்கின் மூச்சாகிறது.
சேது கால்வாய் பகுதி மேடாக உள்ள பகுதி. இதில் கால்வாய்
வெட்டுவதை விட தரைப் பகுதியில் இருந்து மண்ணைக் கொட்டி
மேடாக்கினால் இலங்கைத் தீவிற்கு பாலம் அமைக்க முடியும் என்று
கனவாக பாரதி சொல்கிறார். கால்வாய் வெட்டினாலும், மண்ணைக்
கொட்டி மேடாக்கினாலும் இந்த மிதவை உயிரிகளின் இருப்பு என்பது
கேள்விக்குறியாகும். மண்ணைக் கொட்டினாலும் சரி, கடலின் தரையை
வெட்டி ஆழமாக்கினாலும் சரி தண்ணீர் கலங்கிடும்.
தண்ணீர் கலங்கினால் தண்ணீருக்குள் சூரிய ஒளி பயணிக்கும் தூரம்
குறையும். பல கி.மீ ஆழத்திற்கு செல்லும் சூரிய ஒளியானது சில
மீட்டர்கள் ஆழத்திற்கு மட்டுமே செல்லும். தண்ணீர் கலங்கிய நிலையில
மிதவை உயிரிகளின் எண்ணிக்கை குறைந்து அவைகளின் இருப்பு
குறையும். உணவு குறைவதால் அந்த உணவுச் சங்கிலியில் உள்ள எல்லா
உயிரினங்களின் எண்ணிக்கை குறையும். இந்த எண்ணிக்கை குறையும்
என்ற அலை மிதவை உயிரினங்கள் தொடங்கி நீலத் திமிங்கிலம் வரை
செல்லும்..கடலைத் தாண்டி நிலப் பகுதியையும் பாதிக்கும்.
இதில் உள்ள இன்னுமொரு பிரச்சனை கவனிக்கப்படாமலேயே உள்ளது.
சேது கால்வாய் திட்டத்தில் வெட்டப்படும் கால்வாயின் அளவு 12 மீட்டர்
ஆழம் 300 மீட்டர் அகலம். இந்த 12 மீட்டர் ஆழப் பகுதியில் மண்ணும்,
கல்லும் பாறைகளும் இருக்கும். தரைப் பகுதியில் இருப்பது போலவே.
இந்த ஆழ, அகலத்தில் கால்வாய் வெட்டப்படும் போது அகற்ற வேண்டிய
மண்-கல்-பாறையின் அளவு 9.7 மில்லியன் டன்கள். அதாவது ஏறத்தாழ 1

கோடி டன்கள். பாமரர்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால் 10
டன் அளவுள்ள லாரிகளில் இவற்றை ஏற்றுவதானால் தேவைப்படும்
லாரிகளின் எண்ணிக்கை 10 இலட்சம் லாரிகள். இந்தக் கழிவுகளை
தரைப்பகுதிக்கு கப்பல்லின் கொண்டு வந்து லாரிகளில் ஏற்றி வேறு
இடத்திற்கு எடுத்துச் செல்வது எளிதல்ல. நிலத்தில் நாம் உருவாக்கும்
எல்லா கழிவுகளையும் கடலில் கொட்டலாம் என்று பொதுவாக
நம்மவர்கள் கூறுவது போலவே இங்கேயும் 0.7 மில்லியன் டன் மண்ணைக்
கல்லை கடலின் ஆழ்கடல் பகுதிக்கு எடுத்துச சென்று கொட்டப்படும்.
வேறு விதமாகக் கூறவதானால் சேதுவின் கடல் பகுதியை கலங்கச்
செய்வது மட்டுமின்றி வேறு எங்கோ உள்ள ஆழ்கடல் பகுதியின்
தண்ணீரையும் கலங்கச் செய்யும் வேலை இது.
இப்படி சூரிய ஒளி கடலுக்குள் பயணிக்கும் தூரம் குறைவதால் வேறு
என்ன நடக்கும்?


மிதவை உயிரிகளுக்கும், தரைமட்ட தாவரங்களுக்கும் பிழைத்திருக்கவும்
நிலைத்திருக்கவும் சூரிய ஒளி மிக அவசியம். ஒளிச் சேர்க்கை மூலம்
தங்களின் இருப்பையும், சந்ததி பெருக்கத்தையும் செய்துவரும்
இவைகளுக்கு சூரிய ஒளி கிடைக்காமல் போகும் போது இவைகளின்
எண்ணிக்கை அளவு குறையும். கடல் உயிரினங்களின் உணவுச்
சங்கிலியின் முதல் கண்ணியாக உள்ள மிதவை உயிரிகளின் தொகை
குறையக் குறைய பிற உயிரினங்களின் எண்ணிக்கையும் குறையும்.
இதனால் இன்னொரு விளைவு ஏற்படும். மிதவை உயிரிகள் எண்ணிக்கை
குறைவு மற்றும் தரை மட்ட தாவரங்களின் எண்ணிக்கை குறைவு கடல்
நீரில் உள்ள கரி அமிலக் காற்று மற்றும் உயிர்காற்றின் சமநிலை
குலையும். கடல் வாழ் விலங்கினங்கள் வெளிவிடும் கரியமிலக் காற்றை
ஒளிச் சேர்க்கையின் போது உள் வாங்கி உயிர்காற்றான ஆக்ஸிஜனை
வெளிவிட்டு சமநிலை குலையாமல் நிலை நிறுத்தும். இவைகளின்
தொகை குறையும் போது இந்த சம நிலையும் குறையும். விலங்கினங்கள்
வெளிவிடும் கரியமில வாயு செரிக்கப்படாமல் கடல் நீரில் கலந்து கடல்
நீரை மெல்ல மெல்ல  கார்பானிக் அமிலமாக தண்ணீரை மாற்றி  கடல்
தண்ணீரின் தன்மையை அமிலத் தன்மைக்கு மாற்றும்.
ஏற்கெனவே மிதவை உயிரிகள், தாவரங்கள் உணவு குறைவால் பிற
உயிரினங்களின் எண்ணிக்கை குறையும் நிலையில் இந்த அமிலத்
தன்மை அதிகமாவது மிதவை உயிரிகளின் எண்ணிக்கையை இன்னும்
அதிகம் குலைக்கும்.
கடல்தான் ஒட்டு மொத்த புவியின்   தட்பவெப்ப நிலையை
உறுதிப்படுத்தும் ஒன்றாக பல இலட்சம் ஆண்டுகளாக நடந்துவருகிறது.

கடலின் சமநிலையே குலையும் போது  அது புவியின் தட்பவெப்ப
நிலையுமையும் பாதிக்கச் செய்யும். ஏற்கெனவே புவியின் சம நிலை
குலைந்து உலகு சூடாகி வருகிறது. காற்றில் இரண்டு நூற்றாண்டுகளாக
நாம் சேர்த்த கரியமில வாயுவில் பெரும் பகுதி கடல் தான் உண்டு
செரிக்கிறது. கடல் தன்னுள் வாங்கும் கரிக் காற்றை உண்மையில்
செரிப்பது கடல் வாழ் உயிரினங்கள் தான். சேது திட்டம் கடல் வாழ்
உயிரினங்களின் தொகையைக் குறைக்க குறைக்க புவி சூடாவது
அதிகரிக்கும். புவி சூடாவது ஏற்கெனவே மிதவை உயிரிகளின் தொகையை
பாதித்து வருகிறது. அவை மிக நுண்ணிய அளவில் அவைகளின்
வாழ்விடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவைகளால் தாக்குப் பிடிக்கும்
சக்தி கொண்டவையல்ல. ஆகவே நம் சேது திட்டம் மிதவை உயிரிகளின்
தொகையைக் குறைத்து புவி சூடாவதை மேலும் தீவிரப்படுத்தும்.
புவியின் நுரையீரல் என மழைக்காடுகளைக் குறிப்பிடுவதைப் போல்
கடலின் நுரையீரலாக சில உயிரினத் தொகுப்புகள் உள்ளன. அவை பவளப்
பாறைகள். பவளப் பாறைகள் திட்டுகள் பவள உயிரிகள் மட்டுமே
உள்ளவை அல்ல. இத்திட்டுகள் பல நூறு நுண்ணுயிரிகளின் வாழ்விடம்.
உயிரின வளம் மிகுந்த பகுதி. சேது சமுத்திரத் திட்டுகள் பவளப் பாறைகள்
மிகுந்த பகுதி. கடலுக்குள் கால்வாய் வெட்டும் போது இப்பவளப் பாறைகள்
முற்றாக அழிந்துவிடும்.  மேலும் சேது கால்வாய் பகுதி உலகில் மிக
அதிக உயிரின வளம் கொண்ட கடல் பகுதிகளில் இரண்டாமிடத்தில்
உள்ள ஒன்று. இதன் காரணமாகவே இந்தியாவின் முதல் கடல்
உயிர்கோளமாக இந்த மன்னார் வளைகுடாப் பகுதி அறிவிக்கப்பட்டது. பல
சிறு சிறு தீவுகள் அடங்கியது இந்த மன்னார் வளை குடா உயிரினக்
கோளம். சேது கால்வாய் திட்டம் அமைய உள்ள பகுதியில் இருந்து 6 கி.மீ
தூரத்தில் மன்னார் உயிரினக் கோளத்தில் உள்ள வான் தீவும், 20 கி.மீ
தூரத்தில் சிங்களே தீவு உள்ளது.
சேது திட்டம் எந்த அளவிற்கு பொருளாதார வகையில் பலன் தரும்
என்பது இன்னொரு கேள்வி. கனவுகள் நம் கௌரவப் பிரச்சனையாக
மாறும் போது பொருளாதார வகையில் கணக்கிடுவதில் சறுக்குவதற்கு
இந்தத் திட்டம் நல்ல உதாரணம்.
அந்த விவரங்கள் இன்னொரு பகீர் வகை. ஆங்கிலேயர் காலத்திலேயே
ஸ்டீமர் கப்பல்கள் கால்வாய் வெட்ட முயன்றனர். இந்தப் பகுதியின்
நீரோட்ட அமைப்புகளால் அவர்கள் முயற்சி நிறைவேறவில்லை. இந்த
நீரோட்டங்களும் தொடர்ந்து இப்பகுதி கடலடியில் மண்ணைக் கொண்டு
வந்து சேருக்கும். ஆகவே கால்வாய் வெட்டினாலும் விரைவில் தூர்ந்து
போகும். கால்வாயை தூர் வாருவதே தொடர் வேலையாக இருக்கும்.

அதிகம் செலவாகவும் இருக்கும்…. நஷ்டம் ஏற்படுத்தும் ஒன்றாகவும்
இருக்கும்.
கனவுகள் எப்போதும் நமக்கு இதமும் மகிழ்ச்சியும் அளிக்கும் ஒன்றாகவே
இருக்கும். ஆனால் எல்லா கனவுகளும் நிறைவேற
வேண்டுமென்பதில்லை. நம் எல்லா கனவுகளும் நிறைவேறுவதாக
இருந்திருந்தால் நம் உலகம் இத்தனை அழகானதாக இருந்திருக்காது.
அகோரமாகவும் அவலமும் நிறைந்த ஒன்றாகவே இருக்கும்.
தமிழ் மண்ணின் பெருமைக்குரிய ஒன்றாக நம் மொழி இலக்கணத்தில்
உள்ள திணையியலைக் குறிப்பிடுவோம். உலகில் வேறு எந்த
மொழியிலும் மக்கள் வாழும் நிலபரப்பை பகுத்து அங்கு வாழும்
உயிரினகள், மக்களின் இயல்புகள் பற்றி குறிப்பிட்டத்தில்லை. தமிழ்
நாட்டு நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களும் இந்த நிலப் பரப்பின்
பகுதியாகவும் அடையாளமாகவும் நம் இலகணம் கருதுகிறது. இங்கு
வாழும் ஒவ்வொரு உயிரின வகையும் தமிழ்நாட்டின் அடையாளமே,
தமிழர்கள் போலவே. இவைகளையும் சேர்த்தே தான் நம் தமிழ்நாடு.
இவைகளின் அழிவும் மொழியின் அழிவைப் போலவே – நம் பண்பாட்டு
அடையாளத்தை அழிக்கும். தமிழ்நாடு அரசு என்பது அவைகளுக்குமான
அரசே.
ஆகவே சேது கால்வாய் திட்டம் நம்முடைய பூமியை சிதைக்கும் கனவாக
இருந்திட வேண்டாம். அரசியல் கட்சியினர் கருத்தியல் பார்வையில்
இருந்து பூமி மீது அக்கறை மிகுந்த பார்வையில் பார்ப்பது நல்லது. 
சேதுவை மேடுயர்த்திய.. கடலுக்குள் கால்வாய் வெட்டிய..

தமிழக மக்கள் மட்டுமா தமிழகம்?
நிறைவேறா நல்ல கனவாகவே இருக்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *