• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆளில்லா வீடுகளில் தொடர் திருட்டு – அச்சத்தில் மக்கள்

ராமேஸ்வரத்தில் ஆளில்லாத வீடுகளில் தொடர்ந்து நடந்துவரும் திருட்டை கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் தீவு பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தில் ஆள் இல்லாத வீடுகளைக் குறி வைத்து நடக்கும் இந்த திருட்டு சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நடைபெற்றுள்ளன. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வருபவர்களுக்கு வீட்டில் பணம் நகை கொள்ளை போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சி.ஆர். செந்தில்வேல் கூறுகையில், பகலில் திருட்டு, இரவில் திருட்டு, வீட்டின் பின்பக்கக்கதவை உடைத்து வீடு புகுந்து திருட்டு, வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்து திருட்டு என பல்வேறு வகைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த திருட்டு சம்பவங்கள் போலீசாருக்கு ஒரு சவாலாகவே உள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், ராமேஸ்வரத்தில் சிவகாமி நகர், சல்லிமலைரோடு, கச்சக்குளம், பாரதிநகர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பல இடங்களிலும், தங்கச்சிமடத்தில் பல்வேறு இடங்களிலும் என கடந்த 2 மாதங்களில் 25 க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டியுள்ள திருடர்கள் மூத்தபத்திரிக்கையாளர் மற்றும் போலீஸார் வீடுகளையும் விட்டுவைக்கவில்லை என்று கூறினார்.
இந்த வீடுகளில் நகைகள், ரொக்கப்பணம் கொள்ளையடித்துச்செல்லப்பட்டுள்ள நிலையில் ஒரு சில திருடர்கள் மட்டுமே பிடிபட்டுள்ளனர். திருடர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நடந்துவரும் தொடர் திருட்டு சம்பவங்கள் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் அச்சத்தைப் போக்கவும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்