தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விட்டமின் சி, மல்டி விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டும், வகுப்புகளில் மாணவர்களிடையே கட்டாயம் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வகுப்புகளை சூழலுக்கு ஏற்ப திறந்த வெளியிலும் நடத்தலாம் என்றும், அனைத்து வகுப்புகளிலும் சுழற்சி முறையில் 50% மாணவர்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நிகழ்ச்சிகளை நடத்திடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் அசிரியர்களின் உடல் நிலையை அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.