• Tue. Apr 23rd, 2024

அழகுமுத்துக்கோனின் தியாகத்தை மறந்த திமுக அரசு : ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்!..

By

Aug 18, 2021

சுதந்திர தினத்தின் போது விடுதலை போராட்ட தியாகி அழகுமுத்துக்கோனின் புகழை திமுக அரசு மறந்து விட்டதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நமது தேசம் சுதந்திரம் பெறுவதற்கு பெரும் பங்கு ஆற்றியவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்களின் வீரமும், தீரமும், துணிவும், கொடையும் அளப்பரியது.

அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அனைவருக்கும் மணிமண்டபங்களும், சிலைகளும் அமைத்து நினைவு கூறும் வகையில் அரசு விழாவும் எடுக்கப்படுகிறது. அதில், பெரும்பான்மையான பங்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும். அதன் தலைவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கும் உண்டு.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும். புரட்சித் தலைவி அம்மா அவர்களும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடி ஏற்றி சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் விதமாகவும், அவர்கள் தம் தியாகத்தைப் போற்றும் விதமாகவும் அனைவரின் திருப்பெயரையும் சுதந்திர தின உரையில் நினைவு கூர்ந்து பேசுவது வழக்கம்.


ஆனால், நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர், அவர்தம் சுதந்திர தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை தவிர்த்து, மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை மட்டும் நினைவு கூர்ந்து பேசியது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 1991-1996 மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியில் மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு சென்னை, எழும்பூரில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டதோடு, தூத்துக்குடி
மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 38.50 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு 68.12.2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.

மேலும், வீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் பெயரில் அரசு போக்குவரத்துக் கழகமும் உருவாக்கப்பட்டு அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டது.

அதே போல், அவர்தம் பிறந்த நாளான ஜூலை 11-ஆம் நாளன்று ஒவ்வொரு ஆண்டும் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்தகைய போற்றுதலுக்குரியவரின் பெயரை இந்த சுதந்திர தினப் பொன் விழா ஆண்டில் நினைவு கூறாமல் சுதந்திர தின உரை நிகழ்த்தியது வருத்தம் அளிக்கிறது. சாதி, மத பேதமற்ற அரசைத் தான் பெரும்பான்மையான மக்கள் விரும்புவார்கள்.


அதன் அடிப்படையில் இது போன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் நிகழா வண்ணம், அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியிலும், புரட்சித் தலைவி அம்மா வழியிலும் நினைவு கூர்ந்து, ஒரே ரீதியான மரியாதையையும், கெளரவத்தையும் வழங்கி அவர்கள் தம் புகழைப் பேண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *