கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று ஹுப்ளியில் பேசியதாவது:
கர்நாடகாவில் இந்து கோயில்கள் அரசு மற்றும் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளன.
அந்த கோயில்களில் இருந்து வரும் பணத்தை கோயில் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியவில்லை. சில இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். எனவே விரைவில் அரசின் பிடியில் இருந்து இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என நீண்ட காலமாக சங்பரிவார் அமைப்புகள் கோரி வருகின்றன.
பிற மதங்களின் கோயில்கள் அந்த மதத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்து மதத்தின் கோயில்களும் அவ்வாறு உள்ளூர் நிர்வாகிகள், மடங்கள் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே, தனி சட்டம் கொண்டு வரப்படும். அதன் மூலம் கர்நாடகாவில் இந்து கோயில்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படும் நிலை ஏற்படும். இது பாஜகவின் கொள்கை முடிவு. இதனை விரைவில் நிறைவேற்றுவது உறுதி.
புதிய சட்டத்தின்படி கோயில் நிர்வாகம் அனைத்தும் கோயில் சம்பந்தப்பட்டவர்களிடமே இருக்கும். இதனால் கோயில்கள் நல்ல வளர்ச்சி அடையும். இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ” கர்நாடக அரசு மிகப்பெரிய தவறை இழைக்கிறது. கோயில்கள் அரசின் சொத்துக்கள். அதன் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. புதிய சட்டத்தின் மூலம் கோயில்களை தனியார் சொத்தாக மாற்ற பசவராஜ் பொம்மை முயல்கிறார். அவ்வாறு கோயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் அதில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை அபகரித்து விடுவார்கள். இந்த சட்டத்தை கொண்டுவர காங்கிரஸ் அனுமதிக்காது” என்றார்.