சோழவந்தான் பகுதியில் ஆன்லைன் மூலம் தரமற்ற பொருட்களை விற்று மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சமயநல்லூர் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போலியான பொருட்களை விற்று பொதுமக்களை ஏமாற்றி வரும் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியை சேர்ந்த முன்னாள் வார்டு கவுன்சிலர் முள்ளை சக்தி என்பவர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது..,
சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் விளம்பரம் மூலம் முடி கருமையாக வளர மற்றும் அடர்த்தியாக வளர எங்களிடம் முயல் எண்ணெய் உள்ளது. அதை வாங்கி உபயோகித்தால் முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று விளம்பரம் வந்ததை பார்த்து ரூபாய் 499 பணம் கட்டி இருந்தேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம் பார்சல் ஒன்றை எனது முகவரிக்கு அனுப்பி வைத்தனர். அதை பிரித்து பார்த்த எனக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.



காரணம் விளம்பரத்தில் அவர்கள் கூறிய பொருளுக்கும், பார்சலில் வீட்டுக்கு வந்த பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரூபாய் 499 என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆன்லைன் நிறுவனம் நூறு ரூபாய்க்கும் குறைவான தரமற்ற எண்ணையை பார்சலில் அனுப்பி வைத்திருந்தனர். அதன் பிறகு அது குறித்து விவரம் அறிவதற்கு அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொழுது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்து நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். இந்த நிலையில் இது குறித்து சமயநல்லூரில் பணிபுரியும் தலைமை காவலர் ஒருவரிடம் கூறிய போது, தானும் அவ்வாறு பணத்தைக் கட்டி ஏமாந்து உள்ளேன் என்று கூறியது .மேலும், அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் என்னை போல் பலரும் இதுபோல் பணம் கட்டி ஏமாந்து இருந்ததை அறிந்து, இனிமேலும் பொதுமக்கள் ஆன்லைன் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாறக்கூடாது என்ற எண்ணத்தில் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளேன்.

இது குறித்து சோழவந்தான் மற்றும் காடுபட்டி காவல் நிலையத்திலும் புகார் அளிக்க இருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகார் மனு மீது உரிய விசாரணை செய்து பொய்யான விளம்பரம் மூலம் பொதுமக்களை ஏமாற்றி வரும் ஆன்லைன் விளம்பர நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனத்தை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
