ராமநாதபுரத்தில் வாகன சோதனையின்போது மூன்று நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு , 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் இன்று மாலை கேணிக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்ய முயன்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்று உள்ளனர்.
இதையடுத்து போலீசார் வேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மறித்து விசாரணையில் ஈடுபட்டு அவர்கள் வந்த இருசக்கர வாகன சோதனை செய்தபோது அதில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது.

இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகளையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சின்னக்கடை நடுத்தெருவில் சேர்ந்த ரியாஸ்கான், முகமது ரிபாயின், முகமது ஜஹாங்கீர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ராமநாதபுரம் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வழக்கம் போல் நடைபெற்ற வாகன சோதனையின் போது நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.