சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். பல்வேறு கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து மனு அளித்து இருந்தார்.
இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த, நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் போலீசாரின் தடையை மீறி இன்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.