• Mon. Dec 9th, 2024

கோவையில் எஸ்.பி வேலுமணி குண்டுகட்டாக கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக காலை 10.30 மணி முதலே ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கோவை கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள் – ரவுடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை தாக்குகின்றனர். பொதுமக்களை மிரட்டுகின்றனர். இதற்கெல்லாம் காவல்துறையும் துணை. காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடக்கிறது.
காவல்துறை அதிகாரிகளை மாற்றுமாறு நாங்கள் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. வீட்டில் கால் முறிந்து படுத்திருக்கும் அதிமுக தொண்டர் மீது பொய்யாக வழக்கு போடுகிறது. ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இங்கு அதிமுக வெற்றி பெறும் சூழல் இருக்கிறது. அதனாலேயே திமுகவினர் இத்தனை குழப்பம் செய்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் நாளை வாக்குப்பெட்டியைக் கூட தூக்குவார்கள். வெளியூர் குண்டர்களை காவல்துறை வெளியேற்ற வேண்டும். தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கோவையில் உள்ள வெளியூர்களைச் சேர்ந்த திமுகவினர் வெளியேற்றப்பட வேண்டும். போலீஸார் மைக் மூலமாக உத்தரவிட வேண்டும் என்று கோரி போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
4 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.