தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் இன்று வாக்குப்பதிவு தொடக்கம் தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மாநகராட்சி வார்டுகள் 1,369, நகராட்சி வார்டுகள் 3,824 ,பேரூராட்சி வார்டுகள் 7409 என மொத்தம் 12602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
மாலை 5 மணிக்குப் பின்னர் வாக்காளர் கூட்டம் அதிகமாக இருந்தால் அனைவருக்கும் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனோ பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இன்று நடைபெறும் தேர்தலில் 2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவுக்காக 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசாரும், 4000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளைப் பொருத்தவரை 1,400 ஓட்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என பிரிக்கப்பட்டுள்ளது.மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் பொறுத்தவரை 1,200 ஓட்டுகளுக்கு ஒரு வாக்குச் சாவடி என பிரிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் நோட்டா சின்னம் இடம்பெறவில்லை. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவானது நடைபெறுகிறது.