தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அவரின் 168-வது பிறந்த நாளான 2022 பிப்ரவரித் 19-ந்தேதி (நாளை) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சா. உருவச் சிலைக்குக் காலை 10 மணிக்கு மலர்த்தூவிப் போற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.உ.வே. சாமிநாதையர், அரிய பல தமிழ்ச் சுவடிகளைத் திரட்டியும், தொகுத்தும் தமிழுலகிற்குத் தந்து அருந்தமிழ்த் தொண்டு ஆற்றியவர். இவர் மட்டும் இப்பணியைச் செய்யாமல் போயிருந்தால் எத்தனையோ அரிய தமிழ்ச் சுவடிகள் கரையானுக்கு இரையாகி இருக்கும், காலப்போக்கில் மறைந்து போயிருக்கும்.செம்மொழித் தமிழின் கருவூலங்கள் ஓலைச் சுவடிப் புதையல் இருந்து அச்சு வடிவில் பதிப்பித்து அளித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கிய நூல்களுள் பலவற்றையும், தமிழ் விடுதூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் எதிர்காலத் தலைமுறையினருக்கு கொண்டு சென்றவர்.இவ்வாறு தமிழ்ச்சுவடிகளைத் தேடிச் சேகரித்துப் பிழைகளைத் திருத்தி, உரைக்குறிப்பு அளித்து, அச்சிட்டு, நூல்களாகக் கொணர்ந்து தமிழுக்கு வளம் சேர்த்த இத்தமிழ் அறிஞரின் பணி தமிழ் உலகில் என்றென்றும் நிலைத்து போற்றுதற்குரியதாகும்.
இவரின் நினைவைப் போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் உத்தமதான புரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், தமிழ் அறிஞர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.