• Thu. Mar 28th, 2024

சசிகலா தான் ‘ஜெ.வை’ பார்த்துக் கொண்டார் – இளவரசி முக்கிய தகவல்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில்,அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி,ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகியுள்ளார். இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது.இந்நிலையில்,”அப்பல்லோ மருத்துவமனையில்,ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவரது உடல்நலக்குறைவுடன் இருந்தார் எனவும் இளவரசி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியுள்ளார்.
ஓபிஎஸ் அவர்களுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு,பல்வேறு காரணங்களால் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.தற்போது அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, இவர்களிடம் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து 3 அல்லது நான்கு மாதங்களுக்குள் அரசிடம் ஆணையம் அறிக்கையை சமர்பிக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *