• Fri. Apr 26th, 2024

ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு..

தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார்.
கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.

கோபாலபுரத்தை சேர்ந்த நபர் பி.ஜி.அர். நிறுவனத்துக்கு பணம் கொடுத்து இருப்பதாகவும், பி.ஜி.ஆர். எனர்ஜிக்கும் திமுகவுக்கும் இரத்த பந்தம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு சி.ஏ.ஜி. தணிக்கையில் பி.ஜி.ஆர். எனர்ஜியால் அதிக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, பல ஆண்டுகளாக லாபத்தையே காட்டாத பி.ஜி.ஆர். நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறினார்.
திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ.36,000 கோடி அளவுக்கு பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு டான்ஜெட்கோ கொடுக்க உள்ளதாகவும், இதுகுறித்து செபிக்கு தமிழ்நாடு பாஜக புகார் கடிதம் எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்ற அண்ணாமலை ஆர்.என்.ரவியை சந்தித்து மின்வாரியம் – பி.ஜி.ஆர். நிறுவனம் இடையிலான ஒப்பந்தம் குறித்து புகாரளித்து உள்ளார். இதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *