கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒப்பந்த நிறுவனமானது மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த ஒப்பந்த நிறுவனம் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம், வேலை நேரம், மருத்துவ பலன்கள் பற்றி எதையும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை இங்கு அழைத்து வந்து வேலை செய்ய வைப்பதாகவும் கூறி கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு ஒரு தீர்வு காண வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். அதற்காக ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதலான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.





