தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், மாப்பிள்ளை சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சென்னை பெருங்குடி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேதமூர்த்தி நேற்று (செப்டம்பர் 10) நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மதியம் 12 மணியளவில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் காலனி இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
நாளை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிநிகழ்வு செய்யப்பட உள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி முதலியார். நிலச்சுவான்தார். விவசாயிக்கே உரிய இயல்பான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் பிடிஆர் என்கிற பழனிவேல் தியாகராஜனுக்கு தாய் வழி சொந்தக்காரர். பிடிஆர் மூலமாகத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரைக்கும், வேதமூர்த்தி அவர்களின் மகன் சபரீசனுக்கும் திருமணப் பேச்சு உறுதி செய்யப்பட்டது. கலைஞர்தான் குடும்பத் தலைவராக இருந்து இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அரசியல் அதிகாரம் மிக்க குடும்பத்தின் சம்பந்தி என்ற எவ்வித கெத்தும் காட்டிக்கொள்ளாமல் தனக்கே உரிய இயல்பான , சர்ச்சைக்கு துளியும் இடமில்லாத வாழ்வை வாழ்ந்தவர் வேதமூர்த்தி முதலியார்.
அவரது மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.