• Mon. Oct 7th, 2024

உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் – ஆந்திர முதல்வர் அறிவிப்பு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

.விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,மேலும்,இருவரின் உடல்களும் இன்று காலை அவர்களது குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம் கூறியது.

விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இருவரது உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது.அதன்படி,இவர்கள் இருவரின் இறுதிச்சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெறவுள்ளது.அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.


இதற்கிடையில்,JWO பிரதீப் , PS சௌஹான், JWO ராணா பிரதாப் தாஸ், குல்தீப் சிங் ஆகிய ராணுவ வீரர்களின் உடல்கள் முன்னதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதாக ஆந்திர முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக,ஆந்திர முதல்வர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“தமிழ்நாடு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.உயிரிழந்த சாய் தேஜா அவர்கள் முப்படைத்தளபதி பிபின் ராவத் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர்”, என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *