• Fri. Apr 19th, 2024

ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம்…விசாரணை குழு அமைக்க பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள்

Byகாயத்ரி

Dec 11, 2021

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு தீயணைப்பு வாகனம் தயாராக இருந்தது.இந்த நிலையில் ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது பனிமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது.

இந்த ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 வகை என்பதால் பனிமூட்டத்திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத், மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட 3 பொருட்கள் காட்டேரி பகுதியில் உள்ள நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இந்த கருப்புப் பெட்டி டெல்லி அல்லது பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடயவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர்,

தற்போது விபத்து நடந்த காட்டேரி பகுதியில் தடயங்களைச் சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதனால் மத்திய அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி போன்ற வெளியாட்கள் தலைமையில் விசாரணையைத் தொடங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *