3000 நொடிகள் பேசி ரூ. 13 லட்சம் நூதன முறையில் திருடிய “ஜம்தாரா” கொள்ளையர்கள். இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றும் “ஜம்தாரா” கொள்ளையர்கள்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். புகாரில், கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது செல்போன்க்கு, சிம் கார்டுக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் இருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குள் ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும், இதைத் தவிர்க்க வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு பேச ஒரு தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பி அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியபோது பதிலளித்த நபர் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படாமலிருக்க உடனடியாக www.rechargecube.com என்ற லிங்கை க்ளிக் செய்து 5 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், இணையதளம் மூலம் வங்கிக்கணக்கின் தகவல்களை பதிவுசெய்து பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வரவில்லை அவர்கள் என்று கூறியதால், தன் மனைவியின் இரண்டு வங்கிக்கணக்கை இணையத்தில் பதிவு செய்து பணம் செலுத்த முயற்சித்தார்.
எனினும் மீண்டும் பணம் வரவில்லை என்றும் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யுமாறும் கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும், சிறிது நேரத்திலேயே தனது வங்கிக்கணக்கு மற்றும் தனது மனைவியின் இரு வங்கிக் கணக்கு என 3 வங்கிக் கணக்குகளிலிருந்து 90 ஆயிரம், 8.60 லட்சம், 3.60 லட்சம் வீதம் சுமார் 13 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து தான் அழைத்த வாடிக்கையாளர் சேவைமைய தொடர்பு எண்ணை மீண்டும் அழைத்தபோது அழைப்பை எடுக்காததை அடுத்து தான் ஏமாந்ததை அறிந்துள்ளார். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மோசடி நபர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், அவர்கள் தொடர்புகொண்ட தொலைபேசி எண்ணை வைத்து விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அந்த எண் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து செயல்படுவது தெரிந்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்தனர். கொல்கத்தாவிலுள்ள ஹவுரா நகரில் பதுங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியைச் சேர்ந்த பிஷ்வநாத் மண்டல், பாபி மண்டல் மற்றும் ராம்புரோஷாத் நாஷ்கர் ஆகிய மூன்று பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.