• Fri. Apr 19th, 2024

வேட்பு மனு வாபஸ் வாங்கினா ரூ.10 லட்சம் பம்பர் பரிசு

வேலுார் மாநகராட்சி தேர்தலில், வேட்பு மனுவை வாபஸ் பெறும் வேட்பாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வேலுார் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன.

இதில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 505 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 472 பேர் களத்தில் உள்ளனர். எட்டாவது வார்டில், தி.மு.க., சார்பில் சுனில்குமார், அ.தி.மு.க., வில் சுரேஷ்குமார், பா.ஜ.க, ராஜா தியாகராஜன் என ஐந்து பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சுனில்குமார் தவிற மற்ற நான்கு வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தி.மு.க., வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வேட்புமனுக்கள் வாபஸ் பெற நாளை ( 7 ம் தேதி )கடைசி நாளாகும்.

மாலை 5:00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இது போன்ற நிலையை பயன்படுத்திக் கொண்டு, களத்தில் உள்ள பலம் மிக்க வேட்பாளர்கள், பணத்தை கொடுத்து மற்றவர்களை வாபஸ் பெற வைக்க மீடியேட்டர்கள் மூலம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பணத்துடன் வேட்பாளர்கள் அலைந்து கொண்டுள்ளனர்.இது குறித்து தேர்தல் ஆர்வலர்கள் கூறியதாவது: வேலுார் மாநகராட்சி தேர்தலில், ஒரு கவுன்சிலர் வேட்பாளர் தேர்தல் செலவு 1 கோடி ரூபாய் வரை ஆகும்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டால் இந்த பணம் மிச்சமாகும். தங்கள் வார்டில் யாராவது வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினால், அந்தந்த கட்சியின் பலத்தை பொருத்து 10 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்கின்றனர். பலர் வந்த வரை லாபம் என்று பணத்தை வாங்கி கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *