• Fri. Apr 26th, 2024

திருவில்லிபுத்தூர் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்…..

ByKalamegam Viswanathan

Feb 10, 2023

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரெங்கசாமி, திருவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பூரணகலா, போக்குவரத்து சார்பு ஆய்வாளர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டனர். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவரும், பெட்காட் அமைப்பின் மாநில துணை தலைவருமான சுப்பிரமணியம் கலந்து கொண்டு விபத்துகளை தவிர்ப்பது குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அவர் பேசும்போது, பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி தவறானது. உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பள்ளி மாணவர்கள் வீட்டில் உள்ள பெற்றோர்களிடம், இருசக்கர வாகனங்கள் வாங்கித்தருமாறு மிரட்டக் கூடாது. இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தால் தான் பள்ளிக்கு செல்வேன் என்று பல மாணவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு வருகின்றனர். இது மிகவும் தவறானது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் படித்து முடித்து, நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.

பெற்றோர் சொல்வதை கேளுங்கள். மேலும் சாலைகளில் நடந்து செல்லும் போது சாலைகளை அடைத்தபடி நடந்து செல்லாதீர்கள். அது உங்களுக்கும் நல்லதல்ல. உங்களுக்கு எதிராக வாகனங்கள் இயக்கி வருபவர்களுக்கும் நல்லதல்ல. விபத்துகள் நடக்காமல் தடுப்பதும், தவிர்ப்பதும் சாலைகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கடமையாகும். சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்துகளை தடுப்போம், தவிர்ப்போம் என்று பள்ளி மாணவர்கள் அனைவரும் உறுதி ஏற்போம் என்று பேசினார். கருத்தரங்கில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *