• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..,

ByKalamegam Viswanathan

Jul 25, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சாலைகளில் மற்றும் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாய்களை ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டி விட்டு சென்றனர். ஆனால் ஆக்கிரப்புகளை அகற்றிய பின்பு அந்தப் பகுதிகளை மறுசீரமைப்பு செய்யாததால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி சாலைகளில் மற்றும் தெருக்களில் ஓடுகிறது. மேலும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு முள்ளிப் பள்ளம் ஊராட்சி பகுதிக்கு நன்றி சொல்வதற்காக வருகை தந்த கருப்பையா எம்எல்ஏவிடம் இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது ஊராட்சி செயலாளரை அழைத்த எம்எல்ஏ உடனடியாக கழிவுநீர் தேங்காதவாறு தற்காலிக நடவடிக்கை எடுக்குமாறு கூறிச் சென்றார். சட்டமன்ற உறுப்பினர் கூறி சென்ற பிறகும் ஊராட்சி செயலாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால் பெரிய அளவில் சுகாதார கேடு ஏற்படும் முன் ஊராட்சி நிர்வாகம் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு துவக்கப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் அவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.