



கச்சத்தீவை மீட்க கோரி தனித்தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
தமிழ்நாட்டில் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதி மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதுடன், தமிழக மீனவர்களின் மீன், படகு, பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையால் எண்ணற்ற தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களையும் போக்கவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் இன்று முன்மொழிந்தார்.
அந்த தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசுகையில், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும். இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை. கச்சத்தீவை மாநில அரசுதான் தாரை வார்த்ததாக திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யப்படுகிறது. கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். நாடாளுமன்றத்திலும் திமுக கடுமையாக எதிர்த்தது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் திருத்தம் தேவை என தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாஜக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை பிரதமர் நரேந்திர மோடி மீட்டு அழைத்து வர வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தின்மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதித்த பிறகு, குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

