புதுச்சேரி குடியிருப்பு பகுதி கழிவுநீர் வாய்க்காலில் ரசாயன கழிவு வெளியேற்றம்….
புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் திடீரென தொழிற்சாலையின் ரசாயன கழிவுகள் வெளியேறியதால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. புதுச்சேரி கதிர்காமம் தொகுதி மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில், கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட,வடக்கு பார்வதிபுரம், தெற்கு பார்வதிபுரம், அண்ணா நகர், அணைக்கரை வீதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் வழியாக இன்று திடீரென்று தொழிற்சாலையின் ரசாயன கழிவுகள் வெளியேறியது.

இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களு திடீரென மூச்சு திணறல் மற்றும் வாந்தி மயக்கத்திற்கு ஆளாகினார்கள், இதனால் அச்சமடைந்த அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அந்த தொகுதியின் திமுக பிரமுகர் வடிவேலு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விசாரித்தார்.

தொடர்ந்து பகுதி மக்கள் கூறும்போது…
இன்று காலை முதல் திடீரென ரசாயனம் கலந்த கழிவுநீரால் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், சாலையில் நடந்து செல்லும் பொழுது கை கால்களில் காயங்கள் ஏற்படுவதாகவும், வீட்டில் உள்ள வெள்ளி மற்றும் பித்தளை பொருட்கள் கருமை நிறத்தில் மாறி விடுவதாகவும் தெரிவித்த அவர்கள் இந்த ரசாயன கழிவுகள் குறித்து பல மாதங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.இது குறித்து திமுக பிரமுகர். வடிவேலு கூறும் போது…கடந்த ஒரு மாத காலமாக தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் குடியிருப்பு பகுதிகள் வழியாக வெளியேற்றப்படுவதால் அந்த பகுதி மக்கள் பல இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரசாயன கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போதிக்க விடுத்தார்.