மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்றம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த பகுதியின் பொதுமக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மன்னாடி மங்கலம் குருவித்துறை விக்கிரமங்கலம் தென்கரை உள்ளிட்ட அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும் இரும்பாடி மன்னாடிமங்கலம் வைகை ஆற்று பாலம் அமைத்த பிறகு இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவிலும் பொதுமக்கள் மருத்துவ உதவிக்காக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இது தவிர விக்கிரமங்கலம் சுற்றுப்புற கிராம பகுதிகள் துவரிமான் கீழ மாத்தூர் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

குறிப்பாக மகப்பேறு மருத்துவ உதவிக்காக வரக்கூடிய கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அருகில் உள்ள கிராமங்களில் ஏதாவது விபத்து ஏற்படும் பட்சத்தில் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு வருவதிலும் ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
108 ஆம்புலன்ஸ்காக சோழவந்தான் பகுதியில் இருந்தும் வாடிபட்டி பகுதியில் இருந்தும் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலையில் காயம் பட்டவர்களுக்கு கோல்டன் டைம் என்ற முறையில் அவசரகால மருத்துவ சேவை செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சுமார் 50,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்று வரும் மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





