• Sat. Apr 20th, 2024

மணலூர் புல்லாவெளி அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை..!

Byவிஷா

Apr 28, 2023

திண்டுக்கல் மாவட்டம், மணலூரில் அமைந்துள்ள புல்லாவெளி அருவியை பாதுகாப்பான சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்ட மணலூர் புல்லாவெளி பகுதியில், இயற்கை எழில் சூழ்ந்த அழகான அருவி உள்ளது.இந்த அருவிக்குசெல்லும் வழியில் அழகான மலைப்பகுதியின் ஈரப்பதமான காற்று, மூலிகையுடன் கலந்த இயற்கை நறுமணம், பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடிகள், தேக்கு மரம் சவுக்கு மரம், பலா மரம், பலாமரத்தில் ஏற்றி விடப்பட்டுள்ள மிளகு கொடிகள், உள்ளிட்ட இயற்கை காட்சிகளை கண் குளிர காணலாம்.
மேலும் அவ்வப்பொழுது காட்டு யானை, காட்டு அணில், மந்தி குரங்குகள், உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் நமது கண்களில் தென்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் வத்தலகுண்டு அய்யம்பாளம் வழியாக சித்தூரில் இருந்து துவங்கப்படும் மலைப்பாதையில் பயணம் செய்யும்போது மலை உச்சியிலிருந்து பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்கு, நெளிவு சுழிவான வளைவுகள், உள்ளிட்டவை கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் விதமாக அமைந்துள்ளன. இத்தனை அழகாக இயற்கை தாயின் மடியில் அமைந்துள்ள இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருந்து வந்துள்ளது. ஆனால், அது இப்போது உடைந்து காண்ப்படுகிறது.
மேலும் நிலக்கோட்டை வத்தலகுண்டு தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்கள் சனிஞாயிறு மற்றும்விடுமுறை நாட்களில் இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வந்து நீராடி மகிழ்வதுடன் இயற்கையை ரசித்து வந்தனர். ‘அழகு இருந்தால் ஆபத்து இருக்கும்’ என்று பழமொழி உண்டு அதற்கு ஏற்றவாறு, இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஒரு பகுதியில் பயங்கர பள்ளத்தாக்கு பகுதியும் உள்ளது.
இந்த அருவிக்கு இன்பச் சுற்றுலா வரும் இளைஞர்கள் அந்தப் பயங்கர பள்ளத்தாக்கு பகுதியை பார்வையிட வேண்டும் என்று பயமறியாது துணிந்து சென்று உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதகம் என கூறுகின்றனர். இந்த பகுதியை பற்றி நன்கு அறிந்த மக்கள். இருந்தாலும் இந்த புல்லாவெளி அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
எனவே இந்த புல்லாவெளி அருவியை அரசாங்கம் பராமரிப்பு செய்து தேவைப்படும் இடத்தில் தடுப்புகளை அமைத்து, பாதுகாப்பான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி முன்வந்தால், வத்தலகுண்டு, தாண்டிக்குடி, நிலக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிக அருகிலேயே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு அழகான சுற்றுலா தலமாக இந்த பகுதி அமையும், என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *