இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்.
மகாராஷ்டிராவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இரண்டு மாணவர்களின் வினாத்தாள்கள், ஓ.எம்.ஆர். தாள்கள் மாறியுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் நீட் முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. விரைவில் இதன் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதலிடம் பிடித்தவர்கள் விவரங்களும் இந்த தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.