• Tue. Dec 10th, 2024

இலங்கை அகதிகளுக்கு குடியிருப்புகள் – இன்று அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்

Byமதி

Nov 2, 2021

வேலூரில் இன்று 3,510 இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இதில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா வேலூரை அடுத்த மேல்மொணவூரில் நடைபெற உள்ளது. மேலும் இங்கு வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இன்று நடக்கிறது.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை அகதிகள் குடும்பங்கள் உள்பட 3,510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பின்னர் இலங்கை அகதிகளுக்கு பல லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள், வேலூர் மாவட்ட கலெக்டர் உள்பட அரசுத்துறை உயர்அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.