• Wed. Apr 23rd, 2025

சுந்தர காண்டத்தை பாராயணம் செய்தால் சங்கடங்கள் விலகும் – ஆன்மீகப் பேச்சாளர் முகுந்தன் பேச்சு…

ByKalamegam Viswanathan

Apr 6, 2025

சுந்தர காண்டத்தை பயபக்தியுடன் பாராயணம் செய்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் விலகும் என ஆன்மீகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார்.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் கலைமாமணி நாகை முகுந்தனின் கம்பராமாயண சொற்பொழிவில் ‘தவம் செய்த தவம்’ என்ற தலைப்பில் பேசியதாவது;

கோவில்களில் வழி, வழியாக செய்யக்கூடிய பூஜை முறைகளை மாற்றக்கூடாது. மாற்றினால் பிற்காலத்தில் கஷ்டப்பட நேர்ந்திடும்.

கம்பன் தன்னுடைய காவியத்தில் தெய்வீக பாத்திரங்களுக்கு ஒரு அடைமொழியை கொடுக்கிறான். காவிய நாயகன் ராமபிரானுக்கு அறத்தின் நாயகன் என்றும் சீதாபிராட்டிக்கு தவம் செய்த தவம் என்றும் கொடுக்கிறான்.

சீதாபிராட்டி அசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த அந்த நிலையை ராமனை குறித்த தவமாகவே கருதி சீதைக்கு தவம் செய்த தவம் என்ற அடைமொழியை கொடுப்பான் கம்பன்.

இதனைக் கூறக்கூடிய பகுதிக்கு ராமாயணத்தில் சுந்தரகாண்டம் என்று பெயர், சுந்தரகாண்டத்தின் சிறப்பே ராம நாமத்தின் சிறப்பை கூறுவது, ராம நாமத்தை சொல்லி அனுமன் கடலை கடந்தான். ஆனால் ராமபிரான் கடலை கடப்பதற்கு சேதுபந்தனம் என்ற அணை தேவைப்பட்டது.
எனவே ராமனைக் காட்டிலும் உயர்ந்தது ராம நாமம். ராம நாமத்தை சொல்லித்தான் சீதாப்பிராட்டி தன் உயிரையும் காப்பாற்றினாள் . அனுமான் கடலை கடக்கிற போது மூன்று தடைகள் ஏற்பட்டன. அந்த மூன்று தடைகளை அனுமன் எப்படி வென்று கடந்தானோ அதேபோல நாமும் நம் வாழ்க்கைப்பாதையை கடக்கிற போது நட்பால் ஒரு தடை வரும். தேவர்கள் ஏதேனும் சோதனை செய்யலாம். அது தான் குரு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி என்று நாம் சில நேரம் பயப்படுகிறோம்.

அந்த வேதனையை மன உறுதியோடு வெல்ல வேண்டும். சில நேரம் உண்மையான தடை அல்லது பகை வரலாம். அதனை தெய்வத்தின் அருளால் வெல்ல வேண்டும் என்பதைத்தான் ராமாயணம் சுந்தரகாண்டம் நமக்கு கூறும் அறிவுரை.

அனுமனின் வாலில் ராவணன் தீ வைத்தான். தீ வைத்தான் என்ற செய்தி சீதையை அடைந்தவுடன் சீதை நான் குற்றம் அற்றவள் என்றால் அனுமனை இந்த தீ ஒன்றும் செய்யக்கூடாது என்று அக்னி பகவானை பிரார்த்தனை செய்தாள். உடனே அனுமன் குளிர்ச்சியை உணர்ந்தான்.

இதன் மூலம் சீதாபிராட்டியும் குற்றமற்றவள் என்று நமக்கு உணர்த்தப்படுகிறது. சுந்தரகாண்டத்தை நாம் பயபக்தியுடன் பாராயணம் செய்தால் நமக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட, ஏற்படக்கூடிய சங்கடங்கள் நீங்கும். இவ்வாறு நாகை முகுந்தன் பேசினார். தொடர் சொற்பொழிவு நிறைவு பெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.