• Sat. Apr 20th, 2024

மெய்ப்பட செய்- விமர்சனம்

Byதன பாலன்

Jan 30, 2023

S.R.பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் தயாரித்துள்ள படம் மெய்ப்பட செய்
இந்தப் படத்தில் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ‘ஆடுகளம்’ ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞானப்பிரகாசம் E.G.P., ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, விஜய கணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜூம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கிராமத்தில் இருந்து நகர வாழ்க்கை பற்றிய அனுபவமே இல்லாத நான்கு நண்பர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ சென்னைக்கு வருகிறார்கள். இங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து வியக்கின்றனர்.

ஒன்றும் தெரியாமல் கிராமத்தில் வாழ்ந்த நாமே இதை தட்டிக் கேட்க வேண்டும் என்று துடிக்கையில் இங்கே இருக்கும் யாருமே அதை கண்டு கொள்ளாமல் சுயநலமாக இருப்பது எதனால்..? அவர்களது சூழ்நிலை என்ன..? ஏன் தட்டி கேட்க மறுக்கிறார்கள்..? என்ற அவர்களது கேள்விகளுக்கு கிடைக்கும் விடைதான் ‘மெய்ப்பட செய்’ படம்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகேயிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹீரோ ஆதவ் பாலாஜி. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இவர் படித்திருந்தாலும் வேலைக்குப் போகாமல் காதலிப்பதையே ஒரு தொழிலாகச் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகி மதுனிகாவை காதலிக்கிறார் ஆதவ்.இந்தக் காதல் விவகாரம் பெரிதாகி இரு வீட்டாருக்கும் விஷயம் தெரிகிறது. அதோடு இந்தக் காதலினால் இரண்டு ஜாதிகளை சேர்ந்த இளைஞர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள்.ஊரில் இருந்தால் வாழ விட மாட்டார்கள் என்று நினைத்த காதலர்கள் ஊரிலேயே திருமணம் செய்து கொண்டு தனது நண்பர்களுடன் ஊரைவிட்டு தப்பித்து சென்னைக்கு வருகிறார்கள்

சென்னையில் ரவுடிக் கும்பலின் தலைவரான ஜெயபாலின் வீட்டில் வாடகைக்குக் குடியேறுகிறார்கள். அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டிருப்பதை அறியும் ஹீரோ, இதை போலீஸிடம் போய் சொல்கிறார்.போலீஸில் புகார் சொல்லப்பட்ட விஷயத்தை அறியும் ரவுடி கும்பல் ஹீரோ, ஹீரோயின், மற்றும் நண்பர்களை அடித்துத் துவைக்கிறது. இவர்களைக் காப்பாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர்களது வாக்குமூலத்தை வைத்து முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் ரவுடி கும்பலை கைது செய்து சிறையில் தள்ளுகிறார்.ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ஹீரோவும், அவரது நண்பர்களும் எடுக்கும் முடிவு என்ன.. அந்த ரவுடிக் கும்பல் என்ன ஆனது என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.
ஹீரோவாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜிக்கு இது முதல் படம். ஆனால் அது தெரியாதது போலவே காதல், செண்டிமெண்ட், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
நாயகி மதுனிகா சுமாரான அழகு என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு நடித்துள்ளார். நாயகியின் தாய் மாமன் வேடத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம், வில்லன் வேடத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.‘கட்ட கஜா’ என்ற தாதாவாக நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால் தனது மிரட்டலான கண்களாலேயே தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் வில்லன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது.மேலும் நேர்மையான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஓ.ஏ.கே.சுந்தர், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேலின் ஒளிப்பதிவு கலர்புல். பாடல் காட்சிகளில் திரையில் ஒரு மாயாஜாலத்தையே செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை மிரட்டலாக காட்சிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் பரணியின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் வேலன். என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதில் உள்ள சந்து பொந்துகள் வழியாக குற்றவாளிகள் மிக எளிதாகத் தப்பித்து விடுவதால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் விரைவாகும், இதைவிடவும் அதிகப்படியான தண்டனைகளையும் வழங்க வேண்டும் என்கிறார் இயக்குநர்.
இயக்குநரின் எண்ணம் சரிதான். ஆனால் அதற்காக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக் களம்தான் தவறானதாக உள்ளது.
வேலைக்கே போகாத ஒருவனுக்கு காதல்தான் முக்கியமா..? கல்யாணம் செய்த பின்பு வேலை தேடும் ஹீரோவுக்கு பாலியல் குற்றவாளிகளைத் தானே தண்டிக்கும் அளவுக்கு சிறப்பறிவு இருப்பதெல்லாம் ரொம்பவோ டூ மச்சான கேரக்டர் ஸ்கெட்ச்.
அதோடு சட்டமும், நீதிமன்றங்களும் குற்றங்களைத் தடுப்பதற்கு இருக்கும்போது நாமே சட்டத்தைக் கையில் எடுத்துத் தண்டனை தருவதெல்லாம் ரொம்பவே தவறு இயக்குநரே… குற்றவாளிகளை கொலை செய்தாலும் அதுவும் ஒரு கொலைதான். அப்படி கொலை செய்வதையெல்லாம் நியாயப்படுத்துவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை இயக்குநரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *