• Mon. Mar 17th, 2025

கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ரியல் எஸ்டேட் எழுச்சி தின மாநாடு

BySeenu

Feb 16, 2024

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ரியல் எஸ்டேட் எழுச்சி தின மாநாடு அதன் தேசிய பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில் ஜென்னிஸ் ரெசிடன்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. ஃபேராவின் தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், சந்திரசேகர், ஜெயம் லேண்ட் கண்ணன்,வினோத் சிங் ரத்தோர், கண்ணன் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர். ஆ. ஹென்றி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி காணொலி வாயிலாக கலந்து கொண்டு நேரலையில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,ரியல் எஸ்டேட் துறை மற்றும் கட்டுமானம் தொடர்பான வளர்ச்சியில் தமிழக அரசு கூடுதல் கவனம் எடுத்து வருவதாக கூறினார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்ந்த தீர்மானங்களாக,சென்னைக்கு அடுத்த படியாக, கோவை மாவட்டத்திற்கு என கோவை புறநகர் வளர்ச்சி குழுமத்தை ஏற்படுத்தியது மற்றும் 30 ஆண்டுகளுக்கு பிறகு முழுமை திட்டத்திற்கான அறிவிப்பு தந்து அதற்கு 60 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள, தமிழ்நாடு அரசுக்கும். வீட்டுவசதி துறைக்கும் நன்றிகளையும் தெரிவிப்பது, புதிய வீட்டுமனை பிரிவினை ஏற்படுத்துவதற்கு தற்போதுள்ள ஏழு மீட்டர் அணுகு சாலை என்ற அளவினை ஆறு மீட்டர் என குறைப்பது, கட்டிட உயரம் தொடர்பான அனுமதியில், 12 மீட்டர் உயரம் என்ற அளவு கோலை மாற்றி 14 மீட்டராக உயர்த்துவது, மனைப் பிரிவு, நில வகைப்பாடு மாற்றம் மற்றும் கட்டிட திட்ட அனுமதியை பெறுவதற்கு கால நிர்ணயம் செய்தும், நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளை இணைத்து இறுதி ஒப்புதலையும் ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ள வேண்டுவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும், அதே போல பதிவு துறையில், பதிவுத்துறையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகளை முத்தரப்பு குழு அமைத்து, இதில் பதிவுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து விரைவாக களைந்திட வேண்டுவது, கிராம நத்தம் வகைபாடு உள்ள மனைகளை எந்தவித நிபந்தனையும் இன்றி தங்கு தடை இன்றி பதிவு செய்ய அனுமதி, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு பதிவு கட்டணம் தற்போதுள்ள 1% என்ற கட்டணத்தை திரும்பப் பெற்று, முன்பு இருந்தது போல ரூபாய் 10,000 என மாற்றியமைத்து உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுவது,அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்ட கூட்டு மதிப்பு நிர்ணயத்தை திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை முரளிதரன், கணேசன், செல்வகுமார், ஷ்யாம் கார்த்திக்,வில்சன்,சுரேஷ்குமார் உட்பட பலர் ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாவட்ட லே அவுட் ஓனர் மற்றும் புரோமோட்டர்ஸ் குழுவிற்கும், கோவை மாவட்ட பில்டர்ஸ் மற்றும் புரோமோட்டர்ஸ் குழுவிற்கும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர். மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.