• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடை பணியாளை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்யவேண்டும்- ராமதாஸ்

ByA.Tamilselvan

Sep 30, 2022

“தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் விற்பனையாளர், கட்டுநர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு 4,000 பேரை நியமிக்க கூட்டுறவுத் துறை முடிவெடுத்துள்ளது. இப்பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம், மாவட்ட அளவில் நேர்காணல் செய்து நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அக்டோபர் 13-ம் தேதி வெளியிட்டு, நவம்பர் 14 வரை விண்ணப்பங்கள் பெற்று, டிசம்பர் 15 முதல் 30-ம் தேதி வரை நேர்காணல் நடத்தி ஆட்களை தேர்ந்தெடுக்க கூட்டுறவு சங்கங்களுக்கு அதன் பதிவாளர் வழிகாட்டுதல்களை வழங்கிஉள்ளார். ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தாமல் வெறும் நேர்காணலை மட்டும் நடத்தி ஆட்களை தேர்வுசெய்வது ஐயத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்காது. கடந்த சில ஆண்டுகள் முன்வரை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், ‘வேலைவாய்ப்பக பதிவு அடிப்படையில் மட்டும் பணி நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது; ஆள்தேர்வு குறித்து பொது அறிவிப்பு வெளியிட்டு, வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்யாதவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்களை பெற்றுத்தான் பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இரு தரப்புக்கும் வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. இரு தரப்பினரின் தகுதி மற்றும் திறமைகளை அளவிட போட்டித் தேர்வுதான் சரியானதாக இருக்குமே தவிர நேர்காணல் சரியான முறையாக இருக்காது. இந்த தேர்வு திட்டத்தை தமிழகஅரசு கைவிட வேண்டும். சம வாய்ப்பு, சமூக நீதியை உறுதி செய்ய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.