இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சீனியர் ஒளிப்பதிவாளர் திரு பணியாற்றி வந்தார். ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக ரத்தினவேலு பணியாற்றி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமிர்தசரஸ் நகரில் சமீபத்தில் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போதிலிருந்து ரத்தினவேலு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவதாகத் தெரிகிறது. இயக்குனர் ஷங்கருக்கும், திருவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள் என்று ஒரு தகவலும், திரு வேறு படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதற்காக இப்படத்திலிருந்து விலகினார் என்று மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.ரத்தினவேலு ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘எந்திரன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர். ராம்சரண் நடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல பிரம்மாண்டப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ரத்தினவேலுவை ராம்சரண்தான் திரு விலகியதும் உடனடியாக அழைத்து வந்ததாகச் சொல்கிறார்கள்.