• Tue. Apr 23rd, 2024

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!

Byவிஷா

Mar 28, 2023

பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவில் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதனால் அடிக்கடி பாஜக நிர்வாகிகளை தூக்கி வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது பாஜக தலைவர்களிடையே பெரும் பரபரப்பை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை தாங்கள் அனைவரும் கட்சிப்பணியினை தொடர்ந்து செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.
அதேபோல அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி ஆர். முருகேசன் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக” தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபா கார்த்திகேயன், போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர். சத்திரக்குடி அருகே செவ்வூரைச் சேர்ந்தவர் மோடி மகி என்ற மகேந்திரன். இவரும் பாஜகவில் உள்ளார். பிரபா கார்த்திகேயன், பாஜகவில் இளைஞரணி நிர்வாகி பதவிக்கு மகேந்திரனிடம் பணம் கேட்டதாக பாஜக நிர்வாகிகள் சமூக வலை தளங்களில் தகவல் பரப்பினர். இந்த தகவலை பார்த்த கட்சி நிர்வாகிகள் பலர் பிரபா கார்த்திகேயனை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக பிரபா கார்த்திகேயன், ராமநாதபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீஸார் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உட்கட்சி பூசலால் ராமநாதபுரம் மாவட்டம் அப்படியே கலைக்கப்பட்ட சம்பவம் பாஜகவில் புயலை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நீக்கப்பட்ட நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *