உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என கூறிக் கொண்டு பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக சென்னையில் ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் பிஏ மோசடி மன்னன் ராஜேஷ் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்
திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூரை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. முதுகலை பட்டதாரியான இவர் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். அப்போது இவரது தோழி மூலம் ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் தேன்மொழியிடம் உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கு நிறைய அரசியல்வாதிகளை தெரியும்.
பணம் கொடுத்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய தேன்மொழி கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் ரூ 4.50 லட்சம் பணத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளார். அதையும் ஊரில் ஒருவரிடம் வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் சொன்னது போல் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தேன்மொழி, ராஜேஷிடம் வேலை கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் திணறிய ராஜேஷ், வேலை ரெடியாக இருக்கிறது. இன்னும் சிலரை சேர்த்துவிட்டால் அந்த துறையை நிரப்பிவிடலாம் என்கிறார்கள். அதனால் உனக்கு தெரிந்த ஆட்களிடம் அரசு வேலைக்கு பணம் கேள், அவர்கள் கொடுத்தால் மொத்தமாக சேர்ந்து பணி நியமன ஆணையை வாங்கித் தருகிறேன் என மீண்டும் ஒரு பொய்யை சொல்லியுள்ளார். இதையும் நம்பிய தேன்மொழி தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை வாங்கி ராஜேஷிடம் கொடுத்துள்ளார்.
எனினும் யாருக்கும் வேலை வாங்கித் தராமல் ராஜேஷ் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் தேன்மொழியிடம் பணம் கொடுத்தவர்கள் அவரை வேலை கேட்டும் இல்லாவிட்டால் பணத்தையாவது திரும்ப தருமாறும் நச்சரித்துள்ளனர்.
இதையடுத்து ராஜேஷ் பணத்தையும் கொடுக்க மறுத்து வேலையையும் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேன்மொழி ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினர்களின் அறிவுறுத்தலின்பேரில் திருப்பத்தூர் காவல் துறையில் தேன்மொழி புகார் அளித்திருந்தார்.
ஆனால் இந்த புகாருக்கு அங்கிருந்த போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து மீண்டும் ராஜேஷை தொடர்பு கொண்ட தேன்மொழி தனது கஷ்டங்களை சொல்லி வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பணத்தையாவது கொடுத்துவிடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது ராஜேஷ், இப்போது நடப்பது எங்கள் கட்சியின் ஆட்சி. நான் உதயநிதி ஸ்டாலினின் பி.ஏ. திங்கள்கிழமை தலைமைச் செயலகத்திற்கு ஆட்களை கூட்டிட்டு வா, அத்தனை பேரையும் வெட்டுகிறேனோ குத்துகிறேனோ நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எங்க போனாலும் உனக்குதான் ஆபத்து என அந்த பெண்ணை மிரட்டும் ஆடியோ வைரலானது.
இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்றும் உதயநிதிக்கு உதவியாளர் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.








