ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் ஹசரங்காவின் அபார பந்து வீச்சால் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா ஸ்டிடேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்தனர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ரன்கள் வரை தாக்குப் பிடித்த சஞ்சு சாம்சன் 7வது ஓவரில் நூர் அஹமது வீசிய பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 10 பவுண்டரிகள், ஐந்து சிக்ஸர்களுடன் 81 ரன்களைக் குவித்தார்.அவரை தோனி ஸ்டம்ப் செய்து வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 37 ரன்கள், துருவ் ஜுரேல் 3, ஹஸரங்கா 4, ஹெய்மெயர் 19 என 20 ஓவர்களில் 182 ரன்களை ராஜஸ்தான் அணி குவித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் ரச்சின் ரவீந்திரா 4வது பந்திலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராகுல் திரிபாதி 23 ரன்களுடன் வெளியேறினார்.
ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 63 ரன்களைக் குவித்தார். ஷிவம் டூபே 19, விஜய் ஷங்கர் 9 , ஜடேஜா 32 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே களமிறங்கிய தோனி கடைசி ஓவரின் தொடக்கத்தில் ஹெட்மெயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 20 ஓவர் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் 176 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 2வது முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








