தென்காசி மாவட்டம், குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குற்றாலம்-தென்காசி சாலையில் இராமாலயம் அருகே மிகப் பழமையான மரங்கள் சாலைகளின் நடுவே திடீரென சாய்ந்து விழுந்தன. இதனால் தென்காசி குற்றாலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பத்தின் மீது மரம் சாய்ந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் சில பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டது. எனவே மரத்தை அகற்ற போலீசார், தீயணைப்புதுறை, மின் வாரிய பணியாளர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
இருள் சூழ்ந்த நிலை காணப்பட்டதால் மரத்தை அகற்றுவதில் இரவில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இன்று காலை ஜே. சி. பி. எந்திரம் மூலம் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.