• Mon. Jan 20th, 2025

பரபரப்பு… ஈபிஎஸ் உறவினர் வீட்டில் 2வது நாளாக ரெய்டு!

ByIyamadurai

Jan 8, 2025

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்.ராமலிங்கம் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான, கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தின் சென்னை, கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் வட மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களைப் பெரிய அளவில் செய்து வருகிறது.

இந்த நிலையில் கோவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஈரோடு என்.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகத்தில் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ராமலிங்கத்திற்கு சொந்தமான இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வருமான வரி செலுத்திய ஆவணங்கள், கணக்கில் வராத சொத்துகள், ரொக்கம் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமலிங்கத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும்(ஜனவரி 8) சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.