நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அதேசமயம், பொங்கலுக்கு ’வலிமை’ படத்துடன் ராஜாமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மோதுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

‘ஆர்ஆர்ஆர்’ வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், தியேட்டர்கள் பல மாநிலங்களில் மூடியிருப்பதால் ”வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்திருக்கிறோம். தியேட்டர்கள் மூடியிருப்பதால் எங்களால் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியாது. உலக சினிமா சந்தை இயல்புக்கு திரும்பியதும் நாங்கள் விரைவில் தேதி அறிவிப்போம்” என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் இந்தப் படக்குழு தெரிவித்தது.
இந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், தியேட்டர்கள் தொடர்ந்து இயங்குவதால், பொங்கலையொட்டி வரும் ஜனவரி 12ஆம் தேதி ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகிறது என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு வெளியாகும் ராஜமெளலி படம் என்பதால் ’ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.