• Fri. Apr 18th, 2025

குற்றங்களை தடுக்க புதுச்சேரி போலீசார் கூடுதல் கவனம்..,

ByB. Sakthivel

Apr 10, 2025

மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் கமாண்டோ எனும் சிறப்பு சைபர் பாதுகாப்பு பிரிவை உருவாக்கி உள்ளது. அதன்படி சைபர் கமாண்டோ தேர்விற்கு அனைத்து மாநிலங்களில் இருந்து 1,128 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதில் 346 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களுக்கு சென்னை ஐஐடி உள்ளிட்ட நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து 10 பேர் பயிற்சி பெற்றனர். இந்த நிலையில் பயிற்சி முடிந்து புதுச்சேரி சைபர் கிரைம் காமண்டோ போலீசாருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பயிற்சி முடித்த சைபர் கிரைம் கமாண்டோ போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி அவர்களை பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ஷாலினி சிங், டிஐஜி சத்திய சுந்தரம், காவல்துறை கண்காணிப்பாளர்கள்உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ….

சட்டம் ஒழுங்கு காவல் துறையின் எதிர்கால நடவடிக்கைகள், காலி பணியிடங்களை நிரப்புவது, இரவு ரோந்தை அதிகரிப்பது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, போதைப்பொருட்களை தடுப்பது, சைபர் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசலை குறைப்பது, காவல்துறைக்கு தேவையான கட்டிட வசதிகளை உருவாக்கி கொடுப்பது போன்ற விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதனை உடனடியாக செய்வதற்கான காலக்கெடுவுக்குள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது என தெரிவித்தவர், பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவதுடன், அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது குற்றங்களை தடுக்க போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.