

மின்சார வசதி வேண்டி அரிகேன் விளக்குகளை ஏந்தி வந்து திருமலையாம்பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாம்பாறை பகுதியில் ஆட்சேபனை இல்லாத தீர்வை ஏற்படாத தரிசு நிலத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருக்கின்ற இடத்திற்கு அமைவிடச் சான்று இல்லை என்பதால் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக மின்சாரம் இல்லாமல் கடந்த எட்டு ஆண்டுகளாக படிப்பதற்கும், சமையல் உள்ளிட்ட இதர வேலைகளை செய்வதற்கும், சிரமப்படுவதாகவும் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எதுவும் இல்லாததால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளால் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ள மக்கள் மாவட்ட ஆட்சியர் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அமைவிடச் சான்று வழங்கி மின்சார இணைப்பு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த அரிகேன் விளக்குகளை வைத்து படிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள் கையில் அரிகேன் விளக்குகளை ஏந்திய வண்ணம் வந்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.


