• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

வறண்ட வைகையால் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்..,

ByKalamegam Viswanathan

Aug 13, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் திருவேடகம் வைகை நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கடுமையான சிரமங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்துள்ளனர்.

ஆடி அமாவாசை நாட்களில் வைகை ஆற்றில் புனித நீராடி, எள் மற்றும் பச்சரிசி கொண்டு பித்ரு கடன் கொடுத்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இதற்காக அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் திருவேடகம் வைகை நதிக்கரைகளுக்குப் படையெடுத்தனர்.
​ஆனால், வைகை நதி முழுவதும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு, மணல் பரப்பாய் பாலைவனம் போலக் காட்சியளித்ததை கண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆற்றில் தண்ணீர் இல்லாததால் புனித நீராட முடியாமல், வெறும் கைகளுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அபிஷேக பொருட்களை தண்ணீரில் விட்டு கரைப்பது வழக்கம் ஆனால் தண்ணீர் இல்லாததால் வைகை ஆற்றில் மணல் மீது வைத்து விட்டு செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது.

இது போன்ற காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக அறநிலைய துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று இப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.